மன்னன் ஒருவன் வயது முதிர்ந்தவர்கள் பூமிக்கு பாரம் என எண்ணி அவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டான். தன் தந்தையின் மீது மிகுந்தஅன்பு கொண்ட ஒரு இளைஞன் தந்தையைக் காப்பாற்ற தன் வீட்டின் கீழே ரகசிய அறையில் அவரைத் தங்க வைத்தான். அவனது மனைவிக்கு அது பிடிக்கவில்லை. சில நாட்களுக்குப் பின், மன்னனுக்கு இந்த தகவல் அரசல் புரசலாகத் தெரிந்தது. அந்த இளைஞனை விசாரிக்க அழைத்தான். காவலாளியிடம், அந்த இளைஞனை அரண்மனைக்கு ஒரே நேரத்தில் வெறும் காலில் நடந்தவனாகவும் வாகனத்தில் ஏறியும் வரச்சொல் என ஆணையிட்டான். தன் தந்தையிடம் இதற்கு ஆலோசனை கேட்டான் இளைஞன். பலகை ஒன்றை ஒரு காலில் கட்டிக்கொண்டு மற்றொரு காலில் ஏதும் அணியாமல் நடந்துசெல் என்றார் தந்தை. அவ்வாறே அவன் மன்னனின் முன் சென்றான்.
அவனுடைய புத்திசாலித்தனத்தை கண்ட மன்னன், நாளை காலனி அணிந்தும் வெறும் காலுடனும் வர உத்திரவிட்டான். அவன் தந்தையிடம் ஆலோசனை கேட்டான். ‘ஷூ’ வடிவிலான காலணியின் கீழ்ப்பகுதியை எடுத்து விட்டு அணிந்து போகச் சொன்னார். அப்படியே மன்னன் முன் சென்றான். அதைப் பார்த்த மன்னன் அவனை பாராட்டினான். நாளை, உன்னுடைய எதிரியையும் விசுவாசமுள்ள நண்பனையும் அழைத்து வா என்றான்.
மீண்டும் தந்தையுடன் ஆலோசனை செய்தான். நாளை உன் மனைவியையும் உன் வளர்ப்பு நாயையும் அழைத்து சென்று மன்னர் முன் அடி என்றார். அப்பொழுது என்ன நடக்கும் என கேட்டான் மகன். அது அங்கே உனக்கே தெரியும் என்றார் தந்தை. அவனும் மன்னனின் முன் நாயையும் மனைவியையும் அடித்தான். நாய் கத்திக் கொண்டே அவனை விட்டு தள்ளிப்போய் நின்றது. அடிவாங்கிய மனைவியோ கோபத்துடன் மற்றவர்கள் முன் என்னை அடிக்கிறாயா? என கூறி, மன்னா! இவன் வீட்டு ரகசிய அறையில் தன் தந்தையை ஒளித்து வைத்துள்ளான் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
மன்னன், “எதிரியைக் காட்டிவிட்டாய், நண்பன் எங்கே?” எனக் கேட்டான். அந்த இளைஞன் தள்ளி நின்று கொண்டிருந்த நாயை அழைத்தான். நாய் வாலை ஆட்டிக் கொண்டே அவனிடம் வந்தது. இதுதான் எனது நண்பன்” என்றான் இளைஞன். அவனின் புத்திசாலித்தனமும் பண்பாடும் மன்னனை கவர, இவ்வளவு திறமைகளை யாரிடம் கற்றாய் என கேட்டார். எல்லாமே என் தந்தையிடமிருந்து தான் மன்னா என கூறினான். மனம் நெகிழ்ந்த மன்னன் அவனது தந்தையை தனது ஆலோசகராக நியமித்ததுடன் முதியவர்களை கொலை செய்யும் ஆணையையும் ரத்து செய்தான்.