ஜாதி மோதல்களை தடுத்து சமுதாய நல்லிணகத்தை ஏற்படுத்திய சின்னபாலன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிது. அந்தவகையில் செல்வாக்குமிக்க விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட வீரரின் மகனாக வளர்ந்து, சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தை விட சமுதாயப் பணியே முக்கியம் என வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட சின்னபாலன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

ராமகிருஷ்ணம ராஜா -− ராமம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1958 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி, ராஜபாளையத்தில் பிறந்தார், சின்னபாலன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் மூன்று அண்ணன் மற்றும் ஒரு அக்கா.
தனது பள்ளிப் படிப்பை மறவர் ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பித்து, ஐந்தாம் வகுப்பு வரை அங்கு படித்தார். அதன்பின்னர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். அதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில், பி.யு.சி படிப்பைப் படித்தார். பட்டப்படிப்பை சாத்தூரிலும், ராஜபாளையத்திலும் படித்து, பி.காம் தேர்ச்சி பெற்றார்.
தனது உறவினர் கருப்பு சுப்பிரமணியம் ஜி மூலமாக, 1980 ஆம் ஆண்டு சங்க அறிமுகம் கிடைத்தது. பச்சைமடம் ஷாகாவிற்கு முதன் முதலில் வந்தார். 1981ல், முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை திருவேடகத்திலும், 1982ல் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை சேலத்தில் உள்ள சாரதா கல்லூரியிலும் முடித்தார்.
1981 முதல் 1983 வரையில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், புதுப்பட்டி போன்ற ஊர்களில் விஸ்தாரக்காக இருந்து, ஷாகா விஸ்தரிப்பு வேலைகளை செய்தார். ஷாகா இல்லாத ஊர்களில் ஆரம்பிப்பதும், இருக்கும் இடங்களில் ஷாகாவை சிறப்பு ஸ்திரப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினார்.
1985ல், ராஜபாளையத்தில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் டெவலப்மென்ட் ஆபீஸராக பணியில் சேர்ந்தார். 2018 வரை அதே நிறுவனத்தில் பணிபுரிந்து, கிளை மேலாளராக பணி நிறைவு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜாதி மோதல்கள் நடைபெற்ற போது, அதனைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். சமுதாய தலைவர்களின் கூட்டம் நடத்தி, அதன் மூலம் சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல, துறவிகளை அந்த இடங்களுக்கு பாதயாத்திரை அழைத்து சென்று, அதன்மூலம் ஜாதி மோதல்கள் பெருமளவில் குறைந்தது.
முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில், ஒருமுறை சமுதாய மோதல்கள் மேலோங்கி இருந்தது. ஜெயலலிதாவுடன் பேச, 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் ஒருவராக சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு, களத்தில் நடக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக விவரித்தார். சமுதாயப் பிரச்சினைக்கு யார் காரணம்? என்ன காரணம்? அதை தீர்ப்பது எப்படி? போன்ற ஆலோசனைகளை வழங்கினார். சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட சின்னபாலன் ஜியின் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதிகாரிகள் பணி மாறுதல் இருந்ததுடன், ஜாதி மோதல்கள் குறைந்தது.
1997ல், ராஜபாளையத்தில் நடந்த கலவரத்தின் போது, அத்தகைய மோசமான சூழலில் நடைபெற்ற சங்கப் பயிற்சி முகாமில், எந்தெந்த சமுதாயங்களிடையே பிரச்சினை இருந்ததோ, அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஓரே மேடையில் அமர்ந்து, சங்கப் பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமுதாயங்கள் இடையே மனக்கசப்புகள் தீர்ந்து, நல்லதொரு புரிந்துணர்வு ஏற்பட, இந்த நிகழ்ச்சி முக்கியக் காரணமாக அமைந்தது. அதனால் சமுதாய மோதல்கள் தடுக்கப்பட்டதுடன், ஹிந்துகளிடையே ஒற்றுமை மேலோங்கியது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வாழவந்தாள்புரம் என்ற ஊரில் ஒருவர், கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அந்த ஊரில் உள்ள அனைவரையும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற அவர் முயன்றார். சங்கத்தின் மூலமாக அந்த முயற்சி தடுக்கப்பட்டது.
மாங்குடி மீனாட்சிபுரத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் தூண்டுதலால், அம்மனின் பூக்குழியை (தீ மிதிக்கும் இடம்) இடிக்கப்பட்டது. அம்மனின் அருளாலும், ஹிந்துக்களின் எழுச்சியாலும் அந்த இடம் புனரமைக்கப்பட்டு, பூக்குழி விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமுதாய ஒற்றுமை மேலோங்க அங்கு ஷாகா தொடங்கப்பட்டது. சேத்தூர் அருகில் உள்ள தேவதானம் மதமாற்றம், பேரையூர் அருகில் உள்ள எழுமலையில் ஜாதி மோதல்கள், சங்கத்தின் சார்பில் தடுக்கப்பட்டது.
ராஜபாளையத்தில் அனைத்து ஹிந்து சமுதாயங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், சங்க சார்பில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு தலைவராக இருந்து, இடிக்கப்பட இருந்த கோயில்களும், மக்கள் பயன்படுத்தும் மண்டபங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. ஸ்தாணுமாலயன் ஜியின் வழிகாட்டுதலில், குழந்தைகளுக்காக “அக்ஷரப்யாஸ்” முறை, 2004 விஜயதசமி அன்று தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டதன் விளைவாக, தற்போது கோயில்களிலும், பல பள்ளிக்கூடங்களிலும் நடைபெற்று வருகிறது.
மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி கோயிலில், அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. தினமும் நடைபெற்றதால் எல்லா சமுதாயத்தினரும் அதில் உற்சாகமாக கலந்து கொண்டனர். நாளடைவில் சமுதாய மாற்றமும், சமுதாய இணக்கமும் ஏற்பட்டு, சமுதாயங்களிடையே நல்லதொரு புரிதல் ஏற்பட்டது.
1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அமுதா என்ற கிருஷ்ணவேனி அவர்களை திருமணம் செய்தார். தனது பள்ளிப் பருவத்தில் சேவிகா சமிதி முகாம் முடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சம்ஸ்கிருத பாரதி முகாமை முடித்து, அதன் பொறுப்பிலும் இருந்துள்ளார். சங்க சிந்தனையை அனைவரும் அறியும் வகையில், 2002 விஜயதசமி அன்று “கிருஹிணி” மாத இதழ் தொடங்கி, 2016 வரை நடத்தினார். இவர்களுக்கு சின்ராம் என்ற மகன் உள்ளார். அவர் தற்போது பெங்களூரில் வியாபாரம் செய்து வருகிறார்.
ஷாகா சிக்ஷக், ஜில்லா பௌத்திக் பிரமுக், ஜில்லா காரியவாஹ், மதுரை கோட்டம் பொறுப்பு, தென் தமிழக சேவாபாரதி பொதுச் செயலாளர், தென் தமிழகத்தின் குடும்ப பிரபோதன் பிரமுக் என பல பொறுப்புகள் வகித்த சின்ன பாலன் ஜி, தற்போது தென் தமிழக மக்கள் இணை தொடர்பாளராக (சஹ பிராந்த சம்பர்க பிரமுக்) இருக்கும் சின்னபாலன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.