மனித வளம் கல்வியின் அடிப்படையில்தான் மேம்படுத்தப்படுகிறது. எவ்வளவு சிரமப்பட்டாலும், கல்வி கற்பதை கைவிடக்கூடாது என்று பெரியோர் வற்புறுத்துவது ஆழ்ந்த அர்த்தமுடையதே. கல்விக்காக எதையும் தியாகம் செய்யலாம். சில செளகரியங்களை குறைத்துக் கொள்ளலாம். தங்களது குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இப்பின்னணியில், அண்மையில் ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளன.
2004க்கும் − 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் பட்டதாரிகளின் சம்பாத்தியத்துக்கும், பட்டம் பெறாதவர்களின் சம்பாத்தியத்துக்கும் இடையே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இடைவெளி இருந்தது. ஆனால், 2017க்குப் பிறகு இந்த இடைவெளி சுருங்கி விட்டது.
2017க்குப் பிறகு, கல்வியில் இளைஞர் பங்கேற்பு சரிந்து கொண்டே வந்துள்ளது. கல்வியில் இளைஞர்களின் பங்கேற்பு 2017ல் 38 சதவீதமாக இருந்தது. ஆனால் 2024ல், இது 34 சதவீதமாக குறைந்து விட்டது. இதற்கு என்ன காரணம் என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சப்படுத்தி உள்ளது. குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மருத்துவம், பொறியியல் போன்றவை ஏழை, எளிய மக்களுக்கு பெரும்பாலும் எட்டாக்கனியாகவே உள்ளது. கொரோனா காலத்தில் வேளாண்மை கை கொடுத்தது. இதன் பிறகு நிலைமை படிப்படியாக மாறி விட்டது. மாத ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கை மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சொற்பமாகவே உள்ளது. பொருளாதாரம் சமச்சீராக இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. ஊதியத்திலும் வித்தியாசம் காணப்படுகிறது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று கூறப்பட்டாலும் சம்பள பிரச்சினையில் பெண்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த நிலைமை முற்றிலுமாக துரிதமாக மாற வேண்டியது அவசியம்.
2004க்கும் − 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள் வெளியே வந்துள்ளனர். ஆனால் இவர்களில் 28 லட்சம் பேருக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் மாத ஊதியம் பெறுவோரின் எண்ணிக்கை 17 லட்சம் மட்டுமே. பட்டதாரி இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு ஈடுகொடுக்கும் வகையில், வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது ஏற்புடையதே. பாரதத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து மற்ற இடங்களுக்குச் செல்கிறார்கள். இதை தவறென்று கூற முடியாது. இருப்பினும் அவர்களது சொந்த ஊர்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்தால், அது பொருளாதாரத்துக்கும் உகந்ததாக இருக்கும். அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் உவப்பானதாக இருக்கும்.