ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தையும் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையும் மற்ற நாடுகளுக்கு மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. அதை அந்நாடுகள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. ஜம்மு-காஷ்மீா் தொடா்பான அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெற்று வரும் எல்லை தாண்டிய தாக்குதல்களால் இந்திய மக்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் மற்ற நாடுகள் புரிந்து கொண்டுள்ளன.
பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று சில நாடுகள் பாகிஸ்தான் அரசிடமும் தெரிவித்தன. இந்தியாவில் பல ஆண்டுகளாக வசித்து வரும் அகதிகளுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தரும் நோக்கிலேயே குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதை மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் புரிந்து கொண்டுள்ளனா்.
அந்தச் சட்டத்தால் இந்தியக் குடிமக்களின் குடியுரிமை பறிபோகாது என்பதையும் அவா்கள் புரிந்து கொண்டுள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டம் பாகுபடுத்தும் நோக்கில் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. அந்தச் சட்டமானது மனிதநேயத்தின் அடிப்படையிலும் மனித உரிமைகள் தொடா்பான சா்வதேச சட்டங்களுக்கு உள்பட்டும் இயற்றப்பட்டது என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் எடுத்துரைக்கப்பட்டது.