செல்லாத நோட்டுக்களை மாற்ற ரூ.237 கோடிக்கு கடன் கொடுத்த சசி

தொழிலதிபர் ஒருவருக்கு, செல்லாத நோட்டுக்களை கடனாக கொடுத்து, 237 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுக்களை, சசிகலா மாற்றியது, வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, 2016 நவம்பர், 8ல், மத்திய அரசு அறிவித்தது. அந்த நோட்டுக்களை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள, அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. அப்போது, தொழிலதிபர்களை மிரட்டி, 1,674 கோடி ரூபாய்க்கு, செல்லாத நோட்டுக்களை கொடுத்து, சசிகலா சொத்துக்கள் வாங்கி உள்ளார்.

‘நமது எம்.ஜி.ஆர்.,’ நாளிதழ் அலுவலகத்தில், 2017 நவ., 9ல், வருமான வரித்துறை சோதனை நடந்தது. அங்கு கிடைத்த, ஒரு நோட்டில், சில தாள்கள் இருந்தன. அவை, சசிகலா உறவினரும், சென்னை, தி.நகரில் உள்ள, ‘டி.என்.அரிச்சந்தனா எஸ்டேட்’ நிறுவனத்தின் உரிமையாளருமான சிவகுமாரால் எழுதப்பட்ட குறிப்புகள் என, தெரிய வந்தது. அதில், சிலருக்கு பணம் கொடுக்கப் பட்ட விபரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, சிவகுமாரிடம், வருமான வரித்துறை விசாரணை நடத்தி உள்ளது.

ஒப்பந்தம்

அதுபற்றி, வருமான வரித்துறை வெளியிட்ட விபரம்: கடந்த, 2016 நவ., 9ம் தேதி, திருச்செங்கோட்டில் உள்ள, ‘கிறிஸ்டி’ தொழிற்சாலையின் உரிமையாளர் குமாரசாமியிடம், செல்லாத நோட்டுக்களை மாற்றித் தரும்படி, சசிகலா கூறி உள்ளார்.மதிய உணவு திட்டத்திற்கு, மளிகை பொருட்கள் வழங்கும், அரசு ஒப்பந்தத்தை, அந்நிறுவனம் எடுத்திருந்தது.

சசிகலா ஆலோசனைப்படி, குமாரசாமியை சந்தித்து, 237 கோடி ரூபாய், செல்லாத நோட்டுக்கள் கொடுக்க திட்டமிடப்பட்டது. அதற்கு பதில், ஓராண்டுக்கு பின், 6 சதவீத வட்டியுடன், 2,000 ரூபாய், புது நோட்டுக்களாக தர வேண்டும் என, அவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதன்படி, முதல் தவணையாக, டிசம்பர், 29ம் தேதி, 101 கோடி ரூபாய், இரண்டாவது தவணையாக, டிச., 30ம் தேதி, 136 கோடி ரூபாய் என, 237 கோடி வழங்கப்பட்டது.

சோதனை

இது தொடர்பாக, 2018 ஜூலை, 5ம் தேதி, திருச்செங்கோட்டில் உள்ள, குமாரசாமிக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, குமாரசாமியும், அவரது மருமகன் திருப்பதியும், சசிகலா வாயிலாக, பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டனர்.இது தவிர, 1,911 கோடி ரூபாய் வருவாயை, சசிகலா வெளிக்காட்டவில்லை; வருமான வரியும் செலுத்த வில்லை.

மேலும், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாட்களில், கட்சியினர் பெயரில், தொடர்ந்து விளம்பரம் கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக, கட்சியினரிடம் விசாரித்ததில், அவர்கள் விளம்பரம் தரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த விளம்பரத்தை, சசிகலாவே வெளியிட்டு, வருவாய் வந்ததாக காட்டியுள்ளார். அதன் வாயிலாக, பல கோடி ரூபாய்க்கு, கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி உள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.