செங்குருதி சிந்தி வீரர் தூய்மை காத்த திரு இடம்

வைகாசி 17 ஸ்ரீரங்கம் க்ஷேத்திரத்திற்கு மிக மிக முக்கியமான நாள் அன்று தான் சுமார் 48 ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் கழித்து அரங்கனின் உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளன் தன் இருப்பிடமான ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தான். மேலதிக விவரங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1323ம் ஆண்டு, ஸ்ரீரங்கமே கோலாகலமாக அரங்கனின் உற்சவத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
ரங்கன் காவிரிக்கரையிலுள்ள வராஹ மூர்த்தி சன்னதிக்கு எழுந்தருளுகிறான். கூடவே ஊர்வலமாக ஏறத்தாழ 12,000 வைணவர்கள் திரண்டு செல்கின்றனர். சரியாக அந்த நேரத்தில் உலுக்கான் ஸ்ரீரங்கம் மீது படையெடுத்து வருவதாக அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதுவும் உற்சவ விக்கிரஹம் ‘அபரஞ்சி ‘ பொன்னால் ஆனது என்ற விஷயம் தெரிந்தால் விடுவானா உலுக்கன். பதற்றமடைந்த ஸ்ரீரங்கராஜநாத வாதூலதேசிகன் பட்டர் அவசர அவசரமாக ஊர்வலத்தைக் கலைந்துபோக செய்தார். ஊர் பெரியவர்கள் பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் விரைவாக செயல்பட்டு, கல்திரையிட்டு மூலஸ்தானத்தையும் காப்பாற்றி உற்சவரையும், கோயில் நகைகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். பொன்னும், பொருளும் கிடைக்காத ஏமாற்றத்தில் கோயிலைச் சூறையாடியது உலுக்கான் படை ஆத்திரத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி 12,000 வைணவர்களையும் கொன்றான் உலுக்கான்.
மனதை உலுக்கும் இச்சம்பவத்தை” பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக் கலகம்” என்று வரலாறு பதிவு செய்கிறது. ஸ்ரீராமனுக்கு 14 ஆண்டுகள் மட்டுமே வனவாசம். ஆனால் ராமனின் குலதெய்வமான ஸ்ரீரங்கநாதனுக்கோ 48ஆண்டுகள். காட்டிலும், மேட்டிலும் மறைந்து திரிந்து திருமலையைப் பாதுகாப்பாக அடைந்து 48 வருடங்கள் கழித்து 1371 வைகாசி 17 அன்று ஸ்ரீரங்கம் சேர்ந்தான். அத்தோடு விட்டார்களா துலுக்கர்கள்? மீண்டும் 15ம் நூற்றாண்டில் படையெடுத்து வந்தனர். கோயில் பொக்கிஷத்தைக் கொள்ளையடித்தது சுல்தான் படை. அப்படியும் திருப்தியடையாத சுல்தான் ஸ்ரீரங்கத்திலேயே முகாமிட, அரங்கன் பக்தை, நடன மங்கை வெள்ளையம்மாள் அவனை மயக்கி கோபுரத்தின் உச்சிக்கு இட்டுச் சென்று அவனைத் தள்ளிவிட்டு தானும் உயிர் தியாகம் செய்துகொண்ட வீர வரலாறும் உண்டு. அவள் நினைவாக அவள் பெயர் தாங்கி இன்றும் நிற்கிறது வெள்ளை கோபுரம். இதைப் போலவே தான் மாலிக் காஃபூரின் படையிடமிருந்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலைக் காப்பாற்ற எண்ணற்ற சிவாச்சாரியார்களும், பாண்டிய வீரர்களும் பலிதானிகளான வரலாறும் உண்டு. திருவரங்கம் வெள்ளையம்மாளைப் போல தான் திருப்பரங்குன்றம் வைரவ குட்டியும். சுமார் 300 ஆண்டுகள் முன் ஐரோப்பிய படை திருப்பரங்குன்றத்தை நோக்கி வந்தது. அதை எப்படியாவது தடுக்க வேண்டுமே. கோயில் சேவகர் முத்துக்கருப்பனின் மகன் வைரவ குட்டி முன்வந்தார்.
மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார் பயந்து பின்வாங்கியது வெள்ளையன் படை சமீபத்தில் நம் கண் முன்னாலேயே பூரணசந்திரன் என்பவர் திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற போராடி, தெய்வத்துக்கு தன்னையே ஆஹூதி ஆக்கிக்கொண்டதைப் பார்க்கவில்லையா? தேசத்தைக் காக்க உயிர் தியாகம் செய்யும் போர் வீரர்களைப் போல நமது கோயில்களை கொள்ளையர்களிடமிருந்து காத்த ஹிந்து போராளிகள் இவர்கள். ஆவணப்படுத்தப்படாத இன்னும் பல சம்பவங்கள் நிச்சயமாக இருக்கும். ஏனெனில் அந்நிய படை நமது தமிழக கோயில் பொக்கிஷங்களை சூறையாடிச் செல்வதைப் பார்த்தும் செயலற்று இருந்திருப்பார்களா நம் முன்னோர்?
இயன்ற வரை எதிர்த்தார்கள், பகைவனின் வாளுக்கு பலியானார்கள். எதிர்ப்பவர் தலையை துண்டித்து முச்சந்தியில் தொங்க விட்டு அராஜகம் செய்தனர் அந்நியர். இதையெல்லாம் தாண்டித் தான் நம் கோயில்கள் மீட்கப்பட்டன. பெரும் போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற ஹிந்துக்கள் தம் இன்னுயிர் ஈந்து காப்பாற்றிய பொக்கிஷங்கள் நம் கோயில்கள். அறம் செழிக்க உருவானவைதான் கோயில்கள். அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வருங்கால சந்ததிக்கு வழங்குவது தான் அறநிலையத்துறையின் கடமை. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஹிந்து அறநிலையத்துறைக்கு நேர்மையும், திறமையும், இறை நம்பிக்கையும் உள்ள மந்திரி கிடைப்பாரா? பார்க்கலாம்!

 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஹிந்துக்களுக்கு கிடைத்த வெற்றி

மத்திய பிரதேசத்தின், தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரபல போஜஷாலா கோயில். 10ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் போஜராஜன், சரஸ்வதி தேவிக்காக இந்த கோயிலை கட்டினார். வாக்தேவி கோயில் என்று அழைக்கப்பட்ட பிரபலமான திருத்தலமாக அக்காலத்தில் விளங்கியது. பல பண்டிதர்கள் இங்கே சம்ஸ்க்ருதம் கற்பித்தனர். நாடு முழுவதிலும் இருந்து பலர், சம்ஸ்க்ருதம் கற்க இந்த கோயிலுக்கு வந்தனர். 13ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் படைகள், நமது நாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்தது. நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன.
1305ம் ஆண்டு, இந்த போஜஷாலா கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மசூதி எழுப்பப்பட்டது. அடுத்த 200 ஆண்டுகளுக்கு கோயிலின் மேலும் பல பகுதிகள் அழிக்கப்பட்டன. முஸ்லிம்கள் இதை, கமல் மௌலா மசூதி என்று அழைத்தனர். 18ம் நூற்றாண்டில் மராத்தியர்கள், இந்த இடத்தை மீட்டனர். 1818ல், மராத்திய – ஆங்கிலேய யுத்தத்தில், மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பிறகு, இந்த இடம் பிரிட்டிஷார் வசம் வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு, 1951ல் இந்த கோயில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் வந்தது, பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. 2003ம் ஆண்டு, ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இங்கே பிரார்த்தனை செய்ய தொல்லியல்துறை அனுமதி வழங்கியது. அதாவது செவ்வாய்க்கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமை மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற நாட்களில், மதரீதியான எந்த விஷயத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை. இந்த இடம் முழுவதும் கோயிலுக்கு சொந்தம் என்று, ஹிந்துக்கள் தரப்பில் 2022ம் ஆண்டு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
தொல்லியல்துறை ஆய்வுகளில், இந்த இடத்தில் சரஸ்வதி கோயில் இருந்ததற்கான ஆதாரமும், கோயில் இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி எழுப்பப்பட்டதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்தது. இதையடுத்து, இந்த இடம் கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பளித்தது. இனி 7 நாட்களுமே இங்கு பூஜைகள் நடத்த தடையில்லை. சமுதாய நல்லிணக்கத்தை பேணும் வகையில், முஸ்லிம்கள் தொழுகை நடத்த மாநில அரசு தனி இடம் வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பல நூறாண்டுகளுக்கு பிறகு, ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.