640க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை மீட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும், பல முக்கிய சாதனைகளை அடுக்கடுக்காக நிகழ்த்தி வருகிறது. பாரதத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் தாயகத்துக்கே கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி திடமாக உள்ளார்.
1947 முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து 13 தொல்பொருட்கள் மட்டுமே பாரதத்துக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து, இந்த நிலை அடியோடு மாறியது. நமது வரலாற்றுச் சிறப்பையும், ஆன்மிகப் பெருமையையும் நிலைநிறுத்தியே தீர வேண்டும் என்பதில், மோடி அரசு அக்கறையை குவித்துள்ளது. 2014ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை மீட்டுக் கொண்டு வரப்பட்டது. இது சோழர் காலத்து சிலையாகும். இது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்காவிடமிருந்து தான் அதிக அளவு தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 578க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள், அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம், 61 தொல்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்தது. 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மேலும் 19 தொல்பொருட்களை ஒப்படைத்தது.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அம்மன் வெண்கலச் சிலை மீட்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவிடமிருந்து மேலும் 111 தொல்பொருட்கள் மீட்கப்பட்டன.
2019ம் ஆண்டு, ஜூலை மாதம் 19ம் தேதி, 68 தொல்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்தது. இதில் சோழர் காலத்தைச் சேர்ந்த அபூர்வ கலைப்பொருட்களும் அடங்கும். 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், 157 தொல்பொருட்களை பாரதத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது. பெரும்பாலும் இந்த தொல்பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டவையே.
2021ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 தொல்பொருட்களையும், 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 70க்கும் மேற்பட்ட தொல்பொருட்களையும் பாரதத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி 2023ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பாரதத்திடம் 20 தொல்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்தது. அதுமட்டுமல்லாமல் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், மேலும் 29 தொல்பொருட்களை பாரதத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
அமெரிக்கா மட்டும்தான் தொல்பொருட்களை திருப்பித் தந்துள்ளது என்று கருத வேண்டியதில்லை. சிங்கப்பூரும் தொல்பொருட்களை திருப்பி அளித்துள்ளது. 2017ல், அரிய சிற்பங்களையும், ஆவணங்களையும் சிங்கப்பூர் அளித்தது. 2018ம் ஆண்டு, இங்கிலாந்து பாரதத்திடம் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அபூர்வ சிற்பத்தை வழங்கியது. 2020ம் ஆண்டு, ஆஸ்திரேலியா 17 தொல்பொருட்களை திருப்பி அளித்தது. 2023ம் ஆண்டு, பல அரிய சிற்பங்களை நெதர்லாந்து திருப்பி அளித்தது. இப்போது சோழர் காலத்தைச் சேர்ந்த செப்புத் தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகள் காரணமாகவே, இது சாத்தியமாகி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி