சில பயணங்கள்… சில பதிவுகள்… மேலும் சில பதிவுகள்…

5. கோயிலை இடிக்க வந்தால் கொலை

பிரபலங்களைச் சுற்றி சில செய்திகள் உலவுவது உண்டு. அதை நிஜமா, நிழலா என்று ஆராய்வது தனி வேலை. நம்மைப் பொறுத்தவரை நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அதில் ஏதாவது சமூகப் பயன்பாடு இருந்தால், நிச்சயம் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம். கணித மேதை ராமானுஜம் பற்றி ஒரு செய்தி உண்டு. உள்ளூர் அறிஞர்கள் அதிசயப்படும் வகையிலும், வெளிநாட்டு அறிஞர்கள் பாராட்டும் வகையிலும், அவருடைய கணித மேன்மை இருந்தது. அவருடைய வறுமை, ஸ்ரீதேவி உபாசனை என்பதெல்லாம் விரிவாக எழுதப்பட்டுவிட்டது. நான் அறிந்த ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
கப்பலேறி லண்டனுக்குப் போன ராமானுஜத்திற்கு முதல் வாரத்திலேயே ஒரு அதிர்ச்சி. அவர் சிரமப்பட்டு தயாரித்திருந்த கணித சமன்பாடுகளை ஏற்கனவே பலர் கண்டுபிடித்து வெளியிட்டு விட்டார்கள். நல்ல வேளையாக ராமானுஜத்தின் ஆராய்ச்சி மிகப்பெரிய அளவில் இருந்ததால், இதைக் கழித்துப் பார்த்தாலும் அவருடைய மவுசு குறையவில்லை. அதாவது எந்தத் துறையிலும், நாம் என்ன சொல்கிறோம் என்பதை தெரிவிக்கும் முன் ஏற்கனவே என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் செய்ய மறந்து விட்டேன்.
அபிராமி அந்தாதியின் உரைகள் பற்றி எழுதிய நான் அதைத் தழுவி பாலகுமாரன் எழுதிய ‘என் கண்மணித் தாமரை’ (விசா பப்ளிகேஷன்ஸ்) என்ற புதினத்தைச் சொல்ல மறந்து விட்டேன். இது நான் ரொம்ப ரசித்து படித்தப் புத்தகம். சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் போகிற ரயிலில், என் கையில் கண்மணி.
ஹவுரா மெயில் ஒரு மாதிரி ஒருக்களித்த ஆட்டத்துடன் சென்னையை பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. லக்கேஜை எங்கே வைப்பது, புது பெண்டாட்டியோடு எப்படி பழகுவது, டிபன் பொட்டலத்தை யார் அவிழ்ப்பது என்று பலவிதமான முயற்சிகள். இதற்கு நடுவில் கண்மணியின் தாக்கத்தோடு நான். சபையில் நடுநாயகம் என்று நினைத்து விட வேண்டாம். மிடில் பர்த் அவ்ளோதான். அங்கேதான் அபிராமி.
விண்ணும், மண்ணுமான சக்தி வெள்ளம் – இந்த விந்தையெல்லாம் ஆங்கது செய் கள்ளம் என்று வர்ணிக்கப்பட்ட தெய்வத்திற்கு விரைவு ரயில் மட்டும் என்ன விதிவிலக்கா. அங்கேயும் இருக்கிறாள், அதை அவ்வப்போது அறிவிக்கிறாள்.
நம்முடைய நாட்குறிப்பைப் பார்க்கும் போது, அவளை விலகல், தேடல், தெரிதல், தெளிதல் என்று ஒருமையிலும், பன்மையிலும் மாறிமாறிப் பேச வேண்டும்.
பணம், காமம் – இது இரண்டும் இழுத்த இழுப்புக்குத்தான் பூமி சுழல்கிறது என்ற மிதப்பில் இருப்பவரைத் தொட்டு துலக்குபவள் இந்தக் கண்மணி.
ரொம்பவும் சிரம சாத்தியமான காரியத்தை பாலகுமாரன் மூச்சு முட்டாமல் செய்து முடித்திருக்கிறார். ஆன்மீகமாக ஒரு படைப்பு, அந்த அருளாளன் மீது ஈடுபாடு கொண்டவர்கள் முகம் சுளிக்காதவாறு எழுத வேண்டும். இந்த முயற்சியில் அவருக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. ஒரு ஜீவனின் கதையையும், ஒரு தேசத்தின் வரலாற்றையும், பக்குவமாகக் கலந்து பிசைந்த களிமண் அச்சு. ஆன்மீகத்தோடு அரசியல் பொருளாதாரத்தையும், வண்ணமாகக் குழைத்துப் பூசி இருக்கிறார். இதில் அவருக்கு த.வெ.க வெற்றி.
அந்தணர் வாழ்வையும், தாழ்வையும் அப்படியே சொல்வது, பெண்ணைப் போற்றியவர், தூற்றியவர் என்ற இரண்டு கட்சியையும் உள்ளது உள்ளபடி, அரண்மனை சூழ்ச்சி, வயற்காட்டு நிகழ்ச்சி என்று விசாலமாக வரையப்பட்ட சித்திரம். ஏகப்பட்ட குறுக்கு சால்கலோடு நெய்யப்பட்டிருக்கும் நேர்த்தியைப் பார்த்தால், இது கதை அல்ல, காலப் பெட்டகம் என்று சொல்லத் தோன்றுகிறது.
அபிராமி பட்டர் இப்படித்தான் இருந்தாரா என்று கேட்டால், கற்பூரத்தின் மேல் கையணைக்க முடியாது. ஆனால் இப்படி இருந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்கத் தூண்டுகிறது. பாலகுமாரனின் குறிக்கோள் எழுத்தால் வாழ்வது, எழுத்தை வாழ்விப்பது, இரண்டும் அபிராமியின் கிருபையால், அவருக்கு சாத்தியமாய் இருக்கிறது. இலக்கியவானில் அந்தக் காதணி ஒளிரும் வரை இந்தக் கதையும் ஒளிரும்.

திருவண்ணாமலையின் வல்லாள மகாராஜா கோபுரத்தில் இருந்து அருணகிரிநாதர் குதித்தார், புதுவாழ்வு பெற்றார் என்பதை நாம் படித்திருக்கிறோம். ஸ்ரீரங்கத்தில் வெள்ளையம்மாள் படையெடுத்து வந்த முஸ்லிம் தளபதியை வெள்ளை கோபுரத்துக்கு மேலே அழைத்துப்போய், கீழே தள்ளியது பற்றியும் கேட்டிருக்கிறோம். தற்கொலைக்கு முயன்றவருக்கு தமிழ் அமுதம், கோயிலை இடிக்க வந்தவனுக்கு கொலை என்கிறது, இந்த மண்ணின் சரித்திரம். ஆனால் கோயிலுக்கு போகிற நாம் கொஞ்சமாவது இந்த கோபுரத்தை கவனிக்கிறோமா, இல்லை. நாம் செய்யாததை கௌதம நீலாம்பரன் செய்திருக்கிறார். ஆக்கிரமிப்புகள் வழியாக, படையெடுப்பு வழியாக, போர்களின் வழியாக வரலாற்றை எழுதும் பழக்கம் இதுவரை இருக்கிறது. தவிர அயல் தேசத்து யாத்திரியர்கள் பதிவு செய்த வரலாற்று நிகழ்வுகளும் உண்டு. கௌதம நீலாம்பரன் எழுதிய அரசர்கள் வளர்த்த ஆன்மீகம், சூரியன் பதிப்பகம் வித்தியாசமான அணுகுமுறை கொண்ட புத்தகம். கோபுரங்களின் வழியே வரலாறு பயணப்பட்டு இருக்கிறது. கோபுரங்கள், அரசர்கள், அருந்தமிழ் என்பவை இதில் வழிநடை காட்சிகள்.
கரிகால் பெருவளத்தான் பட்டினப்பாலை பாடியதற்காக உருத்திரன் கண்ணனாருக்கு வழங்கிய 16 கால் மண்டபத்தை மாரவர்மன் சுந்தரபாண்டியன் இடிக்காமல் விட்ட உயரிய பண்பை எடுத்துரைக்கிறது திருவல்லாரை ஆலய கல்வெட்டு என்கிறார் கௌதம நீலாம்பரன். மண் குடிசைகள், மர வீடுகள், சுட்ட செங்கற்கள், பூங்கொடிகளால் அமைந்த கோயில்களை விவரிக்கும் நூலாசிரியர், பின் பேரரசர் காலத்தில் மேம்பட்ட கட்டிடக்கலையையும் விளக்குகிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திலும், அக்கால அரசர்களும், மக்களும் எந்த அளவுக்கு ஆலய திருப்பணிக்கும், நீதி தவறாத ஆட்சிக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒன்பது கோயில்கள், பத்து விதமான பரிகார ஸ்தலங்கள், முக்கோண தரிசனம், நாற்கோண பயணம் என்கிற ரீதியில் இப்போது விளம்பரப்படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி இறங்குவோருக்கும் இந்த புத்தகம் ஒரு புதிய வெளிச்சம்.
எந்தத் தளத்தையும் முழுமையாக பார்க்காமல் எந்த மூர்த்தியையும் ஒழுங்காக தரிசிக்காமல் இன்றைய மனித ஓட்டம். ஓடாமல் ஒதுங்கி, நிதானித்து, ஆராய்ந்து உணர்வுப்பூர்வமாக தெய்வத்தை அணுக விரும்புகிறவர்களுக்காக எழுதியிருக்கிறார் கௌதம நீலாம்பரன்.

பாரத அரசியலில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. இதில் கால்வாசிக்காவது காங்கிரஸ் கட்சி காரணம் என்று அடித்துப் பேசலாம். `இந்திய வரலாறு- காந்திக்குப் பிறகு’ என்ற தலைப்பில், ராமச்சந்திர குஹா ஒரு ஆங்கில புத்தகத்தை எழுதினார். அதை ஆர்.பி. சாரதி தமிழில் தந்திருக்கிறார். கிழக்குப் பதிப்பகம்.
ராகுல் காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று எல்லா தளங்களிலும் பேசப்படுகிற வார்த்தையில் கருத்துப்பிழை இருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் நான் புரிந்து கொண்டேன். பார்சி மதத்தைச் சேர்ந்த பெரோஸ் காந்தி, தன்னுடைய பெயரை “பெரோஸ் காண்டி” என்றுதான் முதலில் எழுதினார். பிறகு மகாத்மா காந்தி மீது இருந்த அபிமானத்தால், தன் பெயரையும் பெரோஸ் காந்தி என்று மாற்றிக் கொண்டார். இந்த பெயர் மாற்றம் அவருடைய மனைவிக்கு பெரும் லாபமாக மாறியது. அவருடைய மனைவி இந்திரா காந்தி, உண்மையில் இந்திரா காண்டி.
மகளுடைய மகத்துவத்தால் நாடு நஷ்டப்பட்டது என்பது 1980களின் செய்தி. தந்தையால், பாரதம் பாதிக்கப்பட்டது என்பது, 1960களின் வரலாறு. தனி நபரின் உடல்நிலை மட்டுமல்ல, உள்ளத்தின் நிலையும் ஒரு நாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை உடையது. அந்தத் தனிநபர் நாட்டுத் தலைவராக இருந்தால், இந்த நாட்டுக்கு ஆபத்து அதிகரிக்கும்.
ஆயுதங்களால் நாட்டின் எல்லைகள் நிர்ணயிக்கப்படும் இந்த நூற்றாண்டில், நாடுகளுக்கு இடையே நல்லுறவு தரும் பஞ்சசீலக் கொள்கையை முன்னிறுத்தினார் நேரு. அவருடைய நல்ல குணம், பாரதத்திற்கு கெட்டதாக முடிந்தது. சீனாவுக்கும், பாரதத்திற்கும் இடையே உள்ள எல்லையை காவல் காக்காமல் விட்டுவிட்டார் அவர்.
சீனா ஒரு சோசலிஸ்ட் நாடு. சோசலிஸ்ட் நாடு ஆக்கிரமிப்பு செய்யாது என்பது நேருவின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் அவருடைய அமைச்சரவையில் இருந்த கம்யூனிஸ்ட் வி.கே கிருஷ்ண மேனன்.
நேருவின் அரசு பஞ்சசீலம் என்ற பட்டு மெத்தையில் உறங்கிக் கொண்டிருந்த போது, அன்னை பூமியின் நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான சதுர மைல்கள் களவுப் போயின.
சீனப் படைகள் வெகுதூரம் முன்னேறி வந்த பிறகு, நேரு விழித்துக் கொண்டார். பஞ்சசீலத்தை பத்திரமாக லாக்கரில் வைத்தார். கிருஷ்ண மேனனிடமிருந்து அதிகாரத்தை பறித்தார். அமெரிக்காவிடம் உதவி கேட்டார். ஆயுதங்கள் வந்தன. இதையெல்லாம் பதிவு செய்த ராமச்சந்திர குஹா, நேரு மீது சொல்லோ, கல்லோ விழாதபடி வியூகம் வைத்து எழுதி இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொடரும்…

கட்டுரையாளர் ; சுப்பு