சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ படிப்புகளில், 500 இடங்களுக்கு மேல் காலியாக இருப்பதால், நீட் தேர்வில் 96 மதிப்பெண் பெற்றவர்கள் நேரடியாக சென்று சேரலாம். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளில், அரசு கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,226 இடங்கள் உள்ளன.
அதேபோல, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 313; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 533 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில், அரசு மருத்துவ கல்லுாரி இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அதேநேரம், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, 500 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில், ஆயுஷ் அமைச்சகம், நீட் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்களை குறைத்துஉள்ளது.
அதன்படி, பொதுப்பிரிவினருக்கு 122 மதிப்பெண்களும், மற்ற இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 96 மதிப்பெண்களும், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களாக உள்ளன.
– பா.மலர்விழி,
தலைவர், மருத்துவ மாணவர் தேர்வு குழு