சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் காலனி ஆதிக்க மனோபாவத்தை காட்டுகிறது: அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

காங்கிரஸின் முன்னாள் அயலக பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடாவின் உடல் தோற்றம் தொடர்பான கருத்து காலனித்துவ ஆதிக்க மனோபாவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்களின் உடல் தோற்றத்தை விவரிக்க சீனர்கள், அரேபியர்கள், வெள்ளையர்கள், ஆப்பிரிக்கர்கள் போன்ற இன அடையாளங்களை சுட்டிக் காட்டிசாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அயலக பிரிவு தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “சாம் பிட்ரோடாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதோ உளறியதால் தெரிவிக்கப்பட்டது அல்ல. அது காங்கிரஸ் கட்சி மற்றும் அவர்களுக்கு வழிகாட்டிய மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. காலனி ஆதிக்கத்தின் வெளிப்பாடுதான் அது. அவர் இனம் சார்ந்து தெரிவித்துள்ள கருத்து வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நாம்இயற்கையான நிறங்களின் ஒற்றுமையை கொண்டுள்ளோம். இந்தியா என்பது பண்பட்ட சமுதாயத்தை கொண்டது. அது ஒரு நம்பிக்கை அமைப்பு. அது நம் ஆன்மாவில் உள்ள ஒன்று’’ என்றார்.