அரசு பள்ளி ஆசிரி யர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்த வந்த, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு பள்ளி களில், 2,582 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, ஜனவரி, 7ல் போட்டி தேர்வு நடக்கிறது.
இதை ரத்து செய்து, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும் என, 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பட்ட தாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையில் நேற்று, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தினர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்தனர். ஆனால், போராட்டத்திற்கான அனுமதி ரத்தாகி விட்டதாக கூறி, போலீசார் அவர்களை கைது செய்தனர். புதுப்பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பட்டதாரி கள், அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 24,000 பேர், போட்டி தேர்வு இன்றி, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுடன் தேர்ச்சி பெற்ற எங்களை மட்டும், போட்டி தேர்வு எழுத கூறுவது எப்படி நியாயம். எனவே போட்டி தேர்வை ரத்துச் செய்யக் கோரி ஜனநாயக வழியில் போராட, ஒரு வாரத்துக்கு முன் அனுமதி பெற்றோம். நேற்று முன்தினம் இரவோடு, இரவாக அனுமதியை ரத்து செய்து விட்டனர். தகவல் கிடைக்காமல், பல மாவட்டங்களில் இருந்தும், நாங்கள் போராட்டத்துக்கு வந்து விட்டோம். அரசின் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.