தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்குரிய அகவிலைப்படியை 2022 ஏப்ரல் மாதம் வழங்கக்கூடாது முன்கூட்டியே தரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர். இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தி.மு.க அரசு அறிவித்தது. இதனையடுத்து தற்போது தி.மு.கவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ அரசுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வைக்கப்பட்டிருந்த சி.ஐ.டி.யூ தொழிற்சங்க அறிவிப்பு பலகையில் அவர்கள் தங்களுடைய கோரிக்கையை நூதன முறையில் வஞ்சகப் புகழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தனர். அதில், ‘தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முன்னர் போனஸ் கொடுத்த பெருமை. 8 நாட்களுக்கு முன்பு பண்டிகை முன்பணம் கொடுத்த பெருமை. சம்பள பட்டுவாடா சட்டத்தை மீறி காலதாமதமாக சம்பளம் வழங்கும் பெருமை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராடுவதும், ஆளுங்கட்சியாக வந்தவுடன் அமைதி காப்பதும் பெருமை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடங்கிய இடத்திலேயே நிறுத்திய பெருமை. பெருமையோ பெருமை விடியல் ஆட்சிக்கு!’ என்று கடந்த ஆறு மாதங்களாக எதுவுமே செய்யாத தி.மு.க அரசை குத்திக்காட்டும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன.