தென் கொரியா நாட்டில், ‘கொரோனா’ வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது போல, இந்தியாவிலும் செயல்படுத்த வேண்டும்’ என, ஊடக விவாதங்களில், கம்யூனிஸ்டுகளும், சில மூத்த பத்திரிகையாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த, 9ம் தேதி நிலவரப்படி, தென் கொரியாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 10 ஆயிரத்து, 500 பேர்; பலியானோர், 204 பேர்.தென் கொரியாவின், தேகு நகரில், ஷின்சியோஞ்சி சர்ச் ஆப் ஜீசஸ் என்ற அமைப்பை சார்ந்தவர்களிடையே தான், முதலில், இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தென் கொரியாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரில், 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள், இந்த அமைப்பை சேர்ந்தவர்களே. ஆனால், இந்த தொற்று, தங்களிடம் இருந்ததை, அவர்கள் மறைத்து உள்ளனர்.முதலில் அலட்சியமாக இருந்த, தென்கொரியா அரசு, பல நகரங்களுக்கு தொற்று பரவத் துவங்கிய பின், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, இந்த அமைப்பினரிடம், ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தது.லீ மேன் ஹீ என்ற நபரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, 1984 முதல் செயல்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்த அமைப்பினர் உள்ளதாக சொல்லப்படுகிறது.தென் கொரிய அரசு, விசாரணையில் இறங்கிய போது, இந்த அமைப்பினர், பரிசோதனைக்கு உட்பட மறுத்தனர்.அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தியபின், ‘ஒத்துழைக்க மறுத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, அரசு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து, ஷின்சியோஞ்சி சர்ச் ஆப் ஜீசஸ் அமைப்பினர், பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டனர். அந்த அமைப்பினர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை நடந்து வருகிறது.மார்ச், 2ம் தேதி, லீ மேன் ஹீ, ‘தென்கொரியாவில், தங்கள் அமைப்பால், தொற்று அதிகளவில் பரவியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்; அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ எனக் கூறினார்.அதன்பின், கடுமையாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே, அந்நாட்டில் கொரோனா தொற்று, மேலும் பரவாமல் உள்ளது.அங்கு உள்ள மத அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ, ‘இது, மத சார்பின்மைக்கு எதிரானது’ என முழக்கமிட்டு, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால், தமிழத்தில், ‘தப்லீக் ஜமாஅத்’ என்ற பெயரை சொன்னாலே, துள்ளி குதிக்கும் இடது சாரிகளும், எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர் சிலரும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு, முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.தொற்று பரவலின் காரணங்களிலும், அடையாளங்களிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருந்தால் மட்டுமே, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்பதை, அவர்கள் புரிந்து கொள்வார்களா?’தப்லீக் ஜமாஅத்’ என்பது, ஒரு தனிப்பட்ட அமைப்பு; அது, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் அமைப்பு அல்ல என்பதை, புரிந்து கொள்ளுங்கள்.தென்கொரியா போன்று, நாமும், கொரோனாவிற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில், எந்த மதமும் இல்லை; மனிதர்கள் மட்டும் தான் இருக்கின்றனர் என்பதை, அனைவரும் உணர வேண்டும்.ரயில் பெட்டியின்சுத்தம் முக்கியம்!ஏ.ஜி.பிரசாத், ஓய்வு பெற்ற, முதுநிலை நிர்வாக அதிகாரி, தமிழக காவல்துறை, சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கொரோனா வைரஸ் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க, பல கோடி ரூபாய் செலவு செய்து, எண்ணற்ற மனித ஆற்றலை பயன்படுத்தி, மருத்துவமனை கட்டுமான பணிகள், உலகின் பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில், நம் அரசு, எளிமையாக, புத்திசாலித்தனமாக யோசித்து, ரயில் பெட்டிகளை, மருத்துவமனையாக மாற்றி, உலக நாடுகளிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.ஊரடங்கு காரணமாக, தற்போது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அதனால், ரயில் பெட்டிகளை, மருத்துவமனையாக மாற்றுவதில், மக்களுக்கு பாதிப்பு ஏதும் வரப்போவதில்லை.கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்திய பின், அனைத்து ரயில் பெட்டிகளையும், கிருமி நாசினி தெளித்து, முழுமையாக துாய்மைப்படுத்த வேண்டும்.வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, ரயில் பெட்டிகளில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவற்றை துாய்மைப்படுத்துவதில், சின்ன அலட்சியம் கூட இருக்க கூடாது.
நாராயணன் திருப்பதி