கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்; மருத்துவமனையில் வசதி கோரிக்கை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கலெக்டர் விஷ்ணு சந்திரனை, காருடன் சிறைபிடித்த மக்கள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் அவல நிலை குறித்து ஆவேசமாக புகார் தெரிவித்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் விஷ்ணு சந்திரன் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்து திடீரென குவிந்த நோயாளிகளின் உடன் இருப்பாளர்கள் திரண்டு, கலெக்டர் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். ஆவேசமாக பேசிய அவர்கள், ‘மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை; கழிப்பறை செல்வதற்கு கூட பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்’ என கூறினர். கலெக்டர் கூறுகையில், ”புதிய கட்டட பணிகள் நடப்பதால் சிரமம் உள்ளது. விரைவில் கட்டட பணிகளை முடித்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,” என்றார்.