கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஓர் இடத்தில் நின்றவர், “இந்தக் கோயிலைக் கட்டுனது யார்?” எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், “இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே…ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்” என்று கூற… உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தனது தாயார் சிவகாமி அம்மையாரின் செலவுக்காக மாதம்தோறும் 120 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். முதல் அமைச்சரின் தாயார் என்பதால், விருதுநகரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாரைப் பார்க்க தினமும் வெளியூர்களில் இருந்து கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், உறவினர்கள் என்று பலரும் வந்து செல்வார்கள். காமராஜர் மாதம்தோறும் அனுப்பிய 120 ரூபாய் கட்டுப்படியாகவில்லை. தன்னை வீடு தேடி பார்க்க வந்தவர்களுக்கு சோடா, கலர் என்று அவர் வாங்கிக் கொடுப்பதிலேயே அந்த பணத்தின் பெரும் பகுதி செலவானது. அதனால், தனக்கு மேலும் 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக மாதம்தோறும் அனுப்பி வைக்குமாறு காமராஜருக்கு தகவல் அனுப்பினார்.
ஆனால், காமராஜர் “யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். வந்தவர்கள் எல்லாம் எனக்கு சோடா வேண்டும், கலர் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலேயே 120 ரூபாயை வைத்து செலவு செய்யலாமே. ஒருவேளை, அம்மா கேட்டபடி கூடுதலாக 30 ரூபாய் அனுப்பினால், அவரது கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிடும். கோயில், குளம் என்று கிளம்பிவிடுவார். அது அவரது உடல்நிலைக்கு ஆகாது. அதனால், இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்” என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார் காமராஜர்.