கந்த சஷ்டி விரதம்

சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர்களை துன்புறுத்தி வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். முருகப் பெருமான் அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். மனிதர்களின் உட்பகையான காமம், வெகுளி, உலோபம், மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவனின் பெருமையே கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள்.

சூர சம்ஹார முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம், சேவலும் மயிலுமாக மாறியது. சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் ஏற்றார். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன், முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது.

தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. மாணவர்கள் படிப்பிற்கும், குடும்ப நன்மைக்கும், பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும் இவ்விரதத்தை முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடும் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். ‘சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பதன் உண்மையான பொருள், ‘சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்’ என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது உகந்தது.

ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை உட்பட, தென்காசி, ஆயக்குடி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிறப்பாக இவ்விழா நடைபெறும். விழாவின் ஆறாம் நாள் ‘சூரன் போர்’ என்னும் நிகழ்வு நாடக பாணியில் நடைபெறும். விரத முறையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் முருகன் தெய்வானை திருக் கல்யாணத்தன்று பாரணை அருந்தி விரதத்தை முடித்துக்கொள்வர்.

ஆர். கிருஷ்ணமூர்த்தி