கட்டாய மதமாற்ற பாதிரி கைது

கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத்தின் கீழ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு புத்தஜங்கம் என்ற சமூகத்தைச் சேர்ந்த பட்டியலின குடும்பம், மருளசிதேஸ்வர சுவாமிகள் மற்றும் ஹிந்து ஜாகரனா வேதிகே அமைப்பின் ஆதரவின் கீழ் மீண்டும் ஹிந்து மதத்திற்கு திரும்பியது. இதுகுறித்து பேசிய அந்த குடும்பத்தின் தலைவர் சங்கர், “கொப்பல் கரட்டகியில் அருள் பிரார்த்தனை மையம் நடத்தி வரும் சாமுவேல் சத்தியநாராயணன் என்ற பாதிரி, பணம் கொடுத்து கட்டாயப்பாடுத்தி எங்கள் குடும்பத்தை மதம் மாற்றம் செய்தார். வீட்டில் ஹிந்து கடவுள்களை பிரார்த்தனை செய்யவோ அல்லது ஹிந்து தெய்வங்களின் படங்களை வைக்கவோ கூடாது என்று அவர் மிரட்டல் விடுத்தார். எங்கள் வீட்டில் இருந்த ஹிந்து தெய்வங்களின் புகைப்படங்களை பிடுங்கி கால்வாயில் வீசினார். ஹிந்துக் கடவுள்களை வேண்டிக் கொள்வது நரகத்திற்குச் செல்லும் என்று பயமுறுத்தினார். பின்னர் எனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். போதகரின் மனைவி சிவம்மா சாரா, எனது குழந்தைகளை அழைத்துச் சென்று சர்ச் பணிகளில் ஈடுபடுத்தி வந்தார். பாதிரியின் 17 வயது மகன், எனது 15 வயது மகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிரியாரால் நாங்கள் பலமுறை மிரட்டப்பட்டோம், உடல் ரீதியாக தாக்கப்பட்டோம். இதனால், நாங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்ப முடிவெடுத்ததையடுத்து என்னை கொன்று, எனது குழந்தைகளைக் கற்பழிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார்” என கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர், கட்டாய மதமாற்றம், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியின் குடும்பத்தை கைது செய்தனர். பாதிரியின் மகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.