கக்கன் என்றொரு மானுடன் வாழ்ந்த மண்

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கனுக்கு மகனாகப் பிறந்தவர் கக்கன். இளமையில்வறுமையில் உழன்று, பெரும்பாடுபட்டுபள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட அவரைமதுரை வைத்தியநாத ஐயர் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.

இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் கக்கன் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில், 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போதும், கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும், கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும், அவரது மனைவி ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். கக்கன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், வருவாய்த் துறை ஊர்ப்புற உதவியாளர் பணி செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த காலத்தில் மதுரை வந்த போது, அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் என தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்கினார்.

பத்தாண்டுகள் மிக முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன், 1967 தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாக அரசுப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.

தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.முடக்கு நோயால் பாதிக்கப்பட்ட அவர் கோட்டக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில், நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர்., சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி!’ என்று கைகூப்பினார் கக்கன்.

கடைசி காலத்தில், வறுமையில் வாடிய போதும் மதுரையில் சிலர் நிதி திரட்டி தந்த தொகையால் பட்ட கடனை அடைத்தார். கடன் கொடுத்தவர் ‘நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை’ என மறுத்த போதும் அந்த பணத்தை திருப்பித் தந்தார்.டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் செலுத்த வேண்டும் என்கின்றனர்.

நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி, பணத்தை திருப்பிக் கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு பண்பாளர் தமிழக அமைச்சராக இருந்தார் என்பதை அடுத்த தலைமுறை அறியச் செய்வது அவசியம்இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23 அன்று உலக வாழ்வை நீத்தார்.

எளிமைக்கு ஒரு கக்கன்
அமைச்சாரன பிறகும், அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத்துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல், நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தார்.