அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை அச்சத்திற்கு மத்தியில், அங்கு ஐ.டி உட்பட தொழில்நுட்ப செலவினங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இந்திய நிறுவனங்களிலும் மெல்ல எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பல்வேறு துறைகளும் பிரச்சனைகளை எதிர்கொண்ட நிலையில், ஐ.டி துறை மட்டும் வழக்கத்துக்கு மாறாக ஏற்றம் கண்டது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தினை வாரி வழங்கின. அந்த காலக்கட்டத்தில் அதிகப்படியான சம்பளம், வீட்டிலிருந்தே வேலை போன்ற காரணங்களால் ஊழியர்கள் வெளியேறும் விகிதமும் அதிகமாக இருந்தது. இதனால், ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள பல சலுகைகளை வாரி வழங்கப்பட்டன. ஆனால், தற்போது தேவை சரியலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிறுவனங்கள் புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன. ஏற்கனவே அறிவித்த சலுகைகளையும் நிறுத்தியுள்ளன. இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வேரியபிள் பேவினை குறைத்துள்ளன. சில நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை செயல்திறனுக்கேற்ப மட்டுமே கொடுக்க முடியும் என கூறிவிட்டன. இப்படி, பல அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாகவே ஐ.டி துறையில் வெளியாகி வருகின்றன. இது ஊழியர்களுக்கு கவலையளிக்கும் விஷயம். எனவே, அவர்கள் இன்னும் கவனமாகவும் திறமையாகவும் செயல்பட வேண்டும். ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்கலை தக்கவைத்துக்கொள்ள 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுமார் 60 சதவீதம் அதிகம் செலவழித்துள்ளன. இதனால் அவற்றின் லாபம் குறைத்துள்ளது. ஐ.டி நிறுவனங்கள் வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளதால் இதுபோன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரலாம். எனினும் உலக நாடுகளின் நீண்டகாலத்தில் தேவைகள் வலுவாகவே உள்ளதால் இது தற்காலிகமானதுதான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.