குருகுலவாசம் நிறைவு பெற்றவுடன் அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், தம்பியரோடு சென்று அன்றாடம் மக்களை சந்திப்பான், அவர்களிடம் பேசிப் பழகி, நலன் விசாரித்து அவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவான். சந்திக்க வந்தவர்களில் ஒருவர் தொழுநோயாளி என்பது தெரிய வந்தது. மக்கள் அனைவரும் வெறுப்போடு நோக்க, என்ன நடக்குமோ என அதிர்ச்சியில் உறைந்த அம்மனிதன், ‘தங்களைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆசைப் பெருக்கினால்…’ என அழுது புலம்பி கீழே வீழ்ந்து பொறுத்தருள வேண்டினான். மனிதநேயமே மானுடனாக வந்த அவதார புருஷன் ராமன் அவனைத் தூக்கி எடுத்து, அணைத்து அம்மனிதனை ஆனந்த அலைகளால் நனைத்து விட்டான்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்னை சீதா தேவியுடனும் இளவல் லட்சுமணனோடும் கானகம் செல்லும் வழியில் ஸ்ரீராமபிரான் கங்கைக் கரையை அடைகின்றான். அவர்களைக் கண்ட கங்கைக் கரைத் தலைவன் குகனுக்குத் தலைகால் புரியவில்லை. அண்ணலும் அவனை ஆரத்தழுவி, ‘நீயும் எனக்கு ஒரு தம்பி’ என அன்பு மழை பொழிகின்றான். உடனே குகன் ஓடிச் சென்று அவர்களுக்கு உணவு கொண்டு வருகின்றான். என்ன உணவு தெரியுமா? மீனும் தேனும். அண்ணலும் அதை அன்போடு பெற்றுக் கொள்கிறான். ஸ்ரீராமன் குகனை அருகழைத்து, ‘உனது அன்பின் ஆழத்தை உணர்த்த நீரின் ஆழத்தில் வாழும் மீனையும் அன்பின் உயரத்தை உணர்த்த மலையின் உச்சியில் கிடைக்கும் தேனையும் தந்தாயோ நன்று; நன்று’ என எல்லோரும் கேட்கும் வண்ணம் குகனின் அன்பினைப் பாராட்டுகிறான்.
சரணாகதி தந்த சக்கரவத்தி
ராவணன் தம்பி விபீஷணன் ராவணனைப் பிரிந்து, ஸ்ரீ ராமபிரானிடம் சரணாகதி வேண்டி வருகிறான். ஸ்ரீராமன் அருகில் இருந்த சுக்ரீவன் ஜாம்பவான், அங்கதன், நளன், நீலன் உள்ளிட்ட அனைவரும் விபீஷணனுக்கு சரணாகதி வழங்கக் கூடாது என எதிர்க்கின்றனர். ‘இலங்கையைச் சுற்றி வந்தபோது, மது, மாமிசம் இல்லாமலும் வேத பாராயணங்கள் ஒலித்துக் கொண்டும் இருந்த ஒரே இடம் விபீஷணன் மாளிகை மட்டுமே; ராவணன் என்னை சிறைப்பிடித்துக் கொல்ல ஆணையிட்டபோது, தூது வந்தவனைக் கொல்வது பாவம் எனத் தடுத்து நிறுத்தியவன் விபீஷணன்தான்; அன்னை சீதைக்கு அருகிருந்து உதவிகள் செய்து ஆறுதல் அளித்தவள் விபீஷணனின் மகள் திரிசடை மட்டுமே; ஆதலால் விபீஷணனின் சரணாகதியை ஏற்றுக்கொள்ளலாம்’ என அனுமன் கூறினான். பிறகு எல்லோரையும் பார்த்து ஸ்ரீராமன் கூறுகின்றான்: தன்னை சரணடைந்த தேவர்களைக் காக்கும் பொருட்டு, பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால நஞ்சை சிவபெருமான் உண்டார். சிவபெருமான் ஏன் நஞ்சை உண்டார்? ஆகவே தன்னை சரண்டைந்தவர்களைக் காப்பது தான் சிறந்த தர்மம்” என்றான் அண்ணல். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி விபீஷணனையும் தம்பியாக ஏற்றுக்கொண்டான்.
இன்றுபோய் நாளைவா
ஸ்ரீராமபிரானுக்கும், ராவணனுக்கும் நேருக்கு நேர் அச்சம் தரும் பெரும் போர் நிகழ்ந்தது. ராவணன் தன் பலத்தை முழுமையாகப் பிரயோகித்துப் போர் செய்தான். கோதண்டராமர் ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி ராவணனைத் தாக்கினார். முதலில் ராவணனின் தேர் முறிந்தது. தொடர்ந்து கையிலிருந்த ஆயுதங்கள் வீழ்ந்தன. மாவீரன் ராவணன் நிலம் பார்த்து வெட்கித்து நின்றான். ‘இன்று போய் நாளை வா’ என்று மன்னித்து அனுப்பினார் ஸ்ரீராமர். உண்மையான வீரர்களால் மட்டுமே எதிரிகளை மன்னிக்க முடியும். மன்னித்து மக்களின் மனங்களில் நிறைந்தவர் ஸ்ரீராமர். ஆனால் ராவணன் அகம்பாவத்தால் அன்னை சீதையை விடுவிக்காது மீண்டும் போரிட்டு மாண்டொழிந்தான்.
அறத்திற்கும் ஸ்ரீராமனே! மறத்திற்கும் ஸ்ரீராமனே!
வாலி தன்னைக் கொன்றுவிடுவான் என்ற அச்சத்தில், வாலியால் வரமுடியாத ரிஷியமூக மலையில் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் சுக்ரீவன் மறைந்து வாழ்ந்தான். புதியவர்கள் எவராவது அப்பகுதிக்கு வந்தால், வாலியின் ஆட்களோ என அஞ்சுவான். அண்ணல் ஸ்ரீராமரும் லெட்சுமணனும் அன்னை சீதா தேவியைத் தேடிக்கொண்டு சுக்ரீவன் தங்கியிருந்த மலைப் பகுதிக்கு வந்தனர். அனுமன் புதியவர்களைக் கண்டு வணங்கி சுக்ரீவனிடம் அழைத்துக் கொண்டு சென்றான். அனுமன், சுக்ரீவனுக்கு இருவரையும் அறிமுகம் செய்துவைத்தான். அவனுக்கு ஸ்ரீராமரும், லட்சுமணனும் நண்பர்களாயினர். வாலியைக் கொன்று, உன்னை கிஷ்கிந்தை நாட்டின் அரசனாக்குவேன் என்று ஸ்ரீராமர் சுக்ரீவனிடம் உறுதி கூறினார். இருந்தாலும் வாலியின் வீரத்தை எண்ணிக் கலங்கினான் சுக்ரீவன். ஒரே ஒரு அம்பினால் ஏழு மராமரங்களை வீழ்த்தித் தன் பராக்கிரமத்தை பறைசாற்றினார் அண்ணல் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
தொண்டர் தம் பெருமை
ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் இனிதே நிறைவேறியது. ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துத் தனது அன்பினை வெளிப்படுத்தத் தொடங்கினார். சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், குகன், அங்கதன் உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அகம்மகிழ்ந்தார் ஸ்ரீ ராமர். ஆனால் அனைவரின் பார்வையும் ஒருவரை நோக்கியே குவிந்திருந்தது. அவருக்கே முதல் மரியாதை என எண்ணிய அனைவருக்கும், அவருக்கு இறுதிவரை பரிசு கொடுக்காது வியப்பாக இருந்தது. அவரில்லையேல் சீதையைக் கண்டிருக்க இயலாது. லட்சுமணன், பரதன் உயிர்களைக் காத்திருக்க முடியாது. சுக்ரீவன் விபீஷணன் நட்புக் கிடைத்திருக்காது. பரிசளிப்பு நிறைவு பெற்றது. அண்ணல் ஸ்ரீராமர் எழுந்தார். கூட்டத்தின் ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த அனுமனிடம் சென்றார். அனுமன் அவரை வணங்கி நின்றான். ‘ஆஞ்சநேயனே! குணத்தால் செய்கையால் உயர்ந்தவனே! சொல்லின் செல்வனே! என்னை ஆரத்தழுவி என்னை ஆனந்தப்படுத்தவேண்டும்’ என்று ஸ்ரீராமபிரான் விண்ணப்பித்தார். எல்லோருடைய விழிகளும் ஆனந்தத்தில் பனித்தன. தொண்டராகிய அனுமன் தலைவனாகிய ஸ்ரீராமபிரானைத் தழுவிக்கொண்டான்.