ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வரும், பத்ரி நாராயணன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சுந்தர்ராஜன் −- ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக, 1959 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார் பத்ரி நாராயணன் அவர்கள். தனது பள்ளிப்படிப்பை சௌகார்பேட்டை பகுதியில் உள்ள வைஷ்ணவா பள்ளியில் படித்து முடித்த பிறகு, பி.யூ.சி படிப்பை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பயின்றார். அதனைத் தொடர்ந்து மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம் ஜெயின் கல்லூரியில், பி.எஸ்.சி இயற்பியல் பாடத்தில் படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுந்தர்ராஜன் ஜி, பின்னர் “கணேஷ் மார்க் குடை” என்ற பெயரில் குடைகள் தயாரித்து மொத்த விற்பனை செய்து வந்தார். முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்து உள்ளார். அவரது தந்தை செங்கல்பட்டு வரை சைக்கிளில் சென்று சங்கப் பணியில் ஈடுபட்டதைக் கண்டு, தந்தையின் மூலமே சங்கத்திற்கு அறிமுகமானார், பத்ரி ஜி.
பி.யூ.சி படித்துக் கொண்டிருந்தபோது, அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி கொடுந்துயரத்தால், மாணவப் பருவத்திலேயே அதனை எதிர்த்துப் போராடி, ராயப்பேட்டை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைக் கேள்வியுற்ற அன்றைய ஜனசங்கத்தின் தலைவர் ஹர்பகவன் தாஸ் அரோரா, பத்ரி ஜியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்தார். எனினும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார், பத்ரி ஜி. சங்க வழிகாட்டுதலில், 28 மாணவர்கள் சிறைக்கு வெளியே களப்பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவராக, எமர்ஜென்சிக்கு எதிராகப் போராட மக்களைத் திரட்டுவது, சிறையில் உள்ள தலைவர்களுக்கு நேரும் இன்னல்களை மக்களுக்கு தெரிவிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் ஒன்றிணைந்து, தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினர். அதில் சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி அவர்கள், மாணவர்களை நோக்கி “முதலில் போராட்டம், பிறகு படிப்பு என்று கூறியதைப் போல தற்போது எமர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம், அதன் பின்னர் படிப்பு” என கடிதம் எழுதினர். தனது போராட்டத்தால் கல்லூரி படிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தே போராடி, அதனால் “நன்னடத்தை சான்றிதழ்” பெறுவதில் சிக்கலையயும் சந்தித்தார் பத்ரி ஜி. இருந்தபோதிலும், தொடர்ந்து சங்கப்பணி செய்து வந்தார்.
தந்தையின் குடை வியாபாரத்தை கவனித்துக் கொண்டே சங்கப் பணியும் செய்தார். எமர்ஜென்சியின் போது தொடர்ந்து 19 மாதங்கள், 19 நபர்கள் பத்ரிஜியின் வீட்டில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு அதிகாலை மூன்று முப்பது மணிக்கே பத்ரிஜியின் தாயார் ஜெயலட்சுமி அம்மாள் உணவை சமைத்துத் தருவார். இரவு 11 மணி ஆனாலும், யார் வந்தபோதும் அவர்களுக்கு உணவை சமைத்து தருவார்.
எமர்ஜென்சியின் போது 21 மாதமும் பத்ரிஜியின் தந்தை சுந்தர்ராஜன், தங்களது குடும்பச் செலவை குறைத்துக் கொண்டு, மாதாமாதம் போராட்டப் பணிகளுக்காக நிதியுதவி வழங்கினார்.
ஒருநாள் இரவில் சௌகார்பேட்டை பகுதியில், எமர்ஜென்சிக்கு எதிரான சுவரொட்டிகளை ஓட்டும் போது, போலீசார் பின்தொடர்ந்தனர். அவர்களிடமிருந்து தப்பிக்க பிச்சைக்காரர்களுடன் பிச்சைக்காரராக தெருவில் படுத்துக் கொண்டார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசார் அங்கிருந்து கிளம்பினர். அன்று இரவு மட்டும் வாசு ஜியுடன் சேர்ந்து 600 வெவ்வேறு இடங்களில், போஸ்டர்கள் ஒட்டி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
1974 ஆம் ஆண்டு, கோயம்புத்தூரில் முதலாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1975ல், திருப்பராய்துறையில் இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும், 1979ல், நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமும் முடித்தார். அதனைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டு 1990 வரை என தொடர்ந்து 11 சங்கப் பயிற்சி முகாமில் பயிற்றுநராக (சிக்ஷக்காக) இருந்தார்.
சௌகார்பேட்டை பாஹ் கார்யவாஹ் (செயலாளர்), தண்டையார்பேட்டை பாஹ் கார்யவாஹ், சென்னை மாநகர கோஷ் பிரமுக் என பல பொறுப்புகள் வகித்துள்ளார். சௌகார்பேட்டை பகுதியில் ஷாகா நடத்த மைதானம் இல்லாத நிலையில், வீட்டின் மாடியில் ஷாகா நடத்த முயன்று, ஏழு ஷாகா நடந்தது. ஸ்ரீ குருபூஜை நாளன்றே, எல்லா இடங்களிலும் ஸ்ரீ குருபூஜை விழா நடத்துவது போன்ற சங்க விழாக்களை, அன்றைய தினமே நடத்த வேண்டும் என தீர்மானித்து நடத்தி முடிப்பார்கள்.
சங்கத்தின் அகிலபாரத தலைவர்களாக இருந்த ரஜ்ஜூ பையா ஜி, சுதர்சன் ஜி, மூத்த பிரச்சாரக்குகளான சேஷாத்ரி ஜி, சூரி ஜி, பீஷ்மா ஜி, காசி ஜி, இராம கோபாலன் ஜி மற்றும் பல அகிலபாரத அதிகாரிகள், ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் பத்ரி ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் 1ம் தேதி, 1988 ஆம் ஆண்டில் சௌமியா அம்மாளை திருமணம் செய்த பத்ரி ஜி, 2003 −- 2021ம் ஆண்டு வரையில், வேத குருகுலத்தில் அறிவியல் ஆசிரியராக இருந்தார். சுதேசி இனமான நாட்டு மாடுகளை பராமரித்து வளர்த்தார். 2021 ஆம் ஆண்டிலிருந்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகிறார். மனைவி சௌமியா அம்மாள் சங்கத்தின் சகோதர அமைப்பான சம்ஸ்கார் பாரதியில், சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
பல பிரச்சினைகளுக்கு இடையே தொடர்ந்து சங்கவேலை செய்ததுடன், எமர்ஜென்சியின் போது சங்க காரியகர்த்தர்களுக்கு உற்ற உறுதுணையாக இருந்த பத்ரி நாராயணன் ஜியும், அவரது குடும்பமும் நம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
கட்டுரையாளர் : அ. ஒம்பிரகாஷ்