தமிழகத்தில் சமீபத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திமுக செயல் தலைவராக ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை பெரிய விவாதங்களோ சர்ச்சைகளோ இல்லை. ஸ்டாலின் நியமனம் எதிர்பார்த்ததுதான். அதிமுகவில் பெரிய பெரிய புள்ளிகள் எல்லாம் சசிகலாவை ஏற்றுக் கொண்டாலும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. அது பூகம்பமாக வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சசிகலா நியமனத்தை எதிர்ப்பவர்கள் சிலர், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை உசுப்பேற்றி வருகிறார்கள். சசிகலாவிற்காவது ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் தோழியாக இருந்த அனுபவம் இருக்கிறது. தீபாவிற்கு அதுவும் இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனபிறகே தீபாவின் பெயர் அடிபடத் துவங்கியுள்ளது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், நீங்கள் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டதாகக் கூறப்படுகிறதே எனக் கேட்டதற்கு, ஆமாம், இல்லை என்று பதில் சொல்வதற்கு பதிலாக நான் மதச்சார்பற்றவள் என்று தெரிவித்துள்ளார். சசிகலா வேண்டாம் என்கிறவர்கள் அதைவிட ஒரு மோசமான நபரின் சதிவலையில் வீழ்ந்து விடக்கூடாது.
இதுவரை ஜெயலலிதா – கருணாநிதி என்றிருந்த அரசியல் இனி ஸ்டாலின் – சசிகலா என்று உருப்பெறும். தமிழகத்தில் 1967 முதல் இன்று வரை மாறி மாறி திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருந்து வருகின்றன. ‘தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்கிய பெருமை இரண்டு கழகங்களையுமே சேரும். இரண்டு கட்சிகளும் ஊழல் கூடாரங்களே’ என்று பல்லவி பாடுவதற்கு பதிலாக, ஊரில் விவரமானவர்களும் விவரமான குழுக்களும் ஒவ்வொரு முறைகேட்டையும் ஒவ்வொரு ஊழலையும் திட்டம்போட்டு வெட்டவெளிச்சமாக்கி வந்தால் ஒரு வேளை மாநிலத்தை சர்வநாசத்திலிருந்து காப்பாற்ற வழி பிறக்கலாம்.