எண்ணம் போல வாழ்வு

ஒரு கோயில் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. கற்களை சுமந்து கொண்டு பல தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த ஒரு துறவி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று ஒருவனை கேட்டார். ஏன் பார்த்தால் தெரியவில்லையா? கல் சுமந்து கொண்டிருக்கிறேன்” என்று கோபமாக பதிலளித்தான். இரண்டாம் ஆளிடமும் இதே கேள்வியை கேட்டார். என் குடும்பத்தை காப்பாற்ற கல் சுமக்கிறேன்” என்றான். மூன்றாவது நபரிடமும் இதே கேள்விதான். அவன், தெய்வ திருப்பணிக்கு எனக்கு கட்டளை இட்ட இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டே, கல் சுமந்து கொண்டிருக்கிறேன்” என்று பரவசத்தோடு கூறினார். செயல் ஒன்றுதான். ஆனால் பதில்கள் மூன்று. அவர்களின் எண்ணம் சொற்களாக வெளிவந்தது.

எண்ணங்கள் வலிமை படைத்தது. எண்ண அலைகள் பிரபஞ்ச சக்தியோடு கலக்கும் வல்லமை படைத்தவை. எண்ணங்களுக்கேற்பவே செயல்களும் மலரும். நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். கெடுதலான எண்ணங்கள் தீயதை தரும். அதனால்தான் நம் முன்னோர்கள், நல்லதையே எண்ணுங்கள். வானில் பறக்கும் தேவதைகள் நம் தலைக்கு மேல் செல்லும்போது ததாஸ்து என்று வாழ்த்துவார்கள் என கூறுவார்கள்.