உலக பாரம்பரிய பட்டியலில் சாரநாத்

“ரிஷி பட்டினம்” என்று அழைக்கப்பட்ட இடம், புத்தர் ஞானம் பெற்ற பிறகு, தனது ஐந்து தோழர்களுக்கு போதித்த இடமான சாரநாத், முதல் பௌத்த சங்கத்தை நிறுவிய இடம். வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான எட்டு பாதையை (அஷ்டாங்க மார்க்கம்) போதித்தார்.
மூன்றாம் நூற்றாண்டில், பேரரசர் அசோகர் 30 அடி உயரம் உள்ள தர்மராஜிகா ஸ்தூபியை கட்டினார். தனது வீரத்தின் சின்னமாக விளங்கும் சிங்க சிலைகளை கொண்ட அசோகத் தூணையும், அந்த இடத்தில் அவர் எழுப்பினார். பாரதம் இந்த சிங்கத்தூணைத்தான், தனது தேசிய சின்னமாக ஏற்றுக் கொண்டது.
குஷான பேரரசர்களின் ஆட்சி காலத்தில், சாரநாத் புனித தலத்தின் முக்கியத்துவம் தொடர்ந்தது. இந்த வம்சத்தின் புகழ் பெற்ற ஆட்சியாளரான கனிஷ்கரின் ஆட்சி காலத்தில், பாலா என்ற பௌத்தத் துறவி, சிவப்பு மணற்கல்லால் ஆன போதி சிலையையும், ஒரு பெரிய குடையையும் பிரதிஷ்டை செய்தார்.
குப்த பேரரசர்களின் ஆட்சி காலத்தில், சாரநாத் கலை மற்றும் கட்டிடக்கலையின் ஒரு முக்கிய மையமாக திகழ்ந்தது. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி காலத்தில், பாரதத்திற்கு வருகை தந்த சீன பயணியான பா-ஹியான், சாரநாத்தில் நான்கு ஸ்தூபிகளும், இரண்டு பெரிய மடாலயங்களும் இருந்ததாக பதிவு செய்துள்ளார்.
பேரரசர் ஹர்ஷவர்தரின் ஆட்சிக் காலமான ஏழாம் நூற்றாண்டில், சீன பயணி ஹூயன் சாங் பாரதத்திற்கு வருகை தந்து சாரநாத் பற்றி பதிவு செய்துள்ளார். புத்தர் தர்மசக்கரத்தை சுழற்றுவதை காட்டும் ஒரு பிரம்மாண்டமான உலோக சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு ஒரு பரந்த மடாலயம் இருந்ததாக மற்றும் 1,500க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டார்.
11ம் நூற்றாண்டில், பாரதத்தின் முஸ்லிம் படையெடுப்புகளால் சாரநாத் பாதிக்கப்பட்டன. இங்கு அமைந்திருந்த மடாலயங்களும், ஸ்தூபிகளும் சேதம் அடைந்ததாக தெரிகிறது. 1026ல், தர்மராஜிகா ஸ்தூபி அழிந்ததைத் தொடர்ந்து ஸ்திர பாலன் மற்றும் வசந்த பாலன் என்ற இரு சகோதரர்கள் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு, வடபாரதத்தில் இஸ்லாமிய படையெடுப்புகளின் தாக்கத்தால், சாரநாத்தின் புனித தலம் வரலாற்றில் மறைந்து போனது. கர்னல் காலின் மெக்கன்சி மற்றும் அலெக்ஸாண்டர் கனிங்கம் போன்றோரின் முயற்சியால், அவ்வபோது தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியது. இதன் விளைவாக எண்ணற்ற நேர்த்திக்கடன், ஸ்தூபிகள், மடாலயங்கள், மற்றும் பௌத்த – சைவ சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
1998 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில் சாரநாத் இடம்பெற்று இருந்தது. 28 வருட நீண்ட காத்திருப்புக்கு பின், உலகிற்கே அமைதி செய்தியை வழங்கிய புத்தரின் தொடர்புடைய இந்த புனித மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருள் தளம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : குகத்யா