நவம்பர் 9 அன்று காலை என் வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தபோது கோவை அரபிக்கல்லூரி முதல்வர் சையது இஸார் ஒரு செய்தி அனுப்பியிருந்தார். காவி டர்பன், கழுத்தில் ருத்திராட்ச மாலை, கரங்களில் பட்டை அணிந்த 18 வயது இளைஞன் அந்த வயது முழுக்கை சட்டை குறுந்தாடி, தலையில் வெள்ளை தொப்பி வைத்திருந்த முஸ்லிம் பையனின் தோள்களில் கை வைத்து நெற்றியில் முத்தம் இடுவதாக ஒரு படம் இருந்தது. அதில் ஒற்றுமை காப்போம் என்று வாசகம் இருந்தது. இதற்கு என்ன மொழிப்புரை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நடுநிலையாளர்களுக்கு இது இரண்டு செய்தி சொல்கிறது. ஒன்று, மைனாரிட்டிகளின் பாதுகாப்பு, மெஜாரிட்டிகளின் கையில் தான் இருக்கிறது. இரண்டு, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்த்துகிறது.
சுதந்திர பாரதத்தில் இது மாதிரியான சென்சிட்டிவ் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு எந்த நீதி மன்றமும் நீதிபதியும் கடந்த காலங்களில் முன் வந்ததில்லை. எனக்கேன் வம்பு? பீஸ்புல்லாக ரிட்டையர் ஆகிவிடலாம் என்பதே அவர்களது மனோ நிலையாக இருந்தது. மிகவும் கான்ட்ரவர்சியல் என்று விமர்சிக்கப்படும் மோடியின் ஹிந்துத்துவா அரசு நீதிமன்றத்துக்கே பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளித்திருந்ததே!
நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்புக்கான முழு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதோடு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு செயலில் இறங்கியிருக்கிறது என்கிற செய்தி மக்களுக்கு புரியும் வகையில் சொல்லப்பட்டது. நாட்டின் பிரதமர் தீர்ப்புக்கு முதல் நாள், ”தீர்ப்பு என்னவாக வந்தாலும் அது யாருக்கும், வெற்றியோ, தோல்வியோ கிடையாது!” என மிகச் சுருக்கமாக மிகப்பெரிய அமைதிக்கான வழியை திறந்து விட்டார்.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போல ஒரு சமூகத்தை அதிகமாக தாஜா செய்து அரசியல் பிழைப்பு நடத்தியதால் காங்கிரஸ் கட்சி ஹிந்து, முஸ்லிம் மக்களை இணைத்து வைக்க விரும்பவில்லை.
பைசாபாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டோடு முடிந்திருக்க வேண்டிய இந்த பிரச்சினையை படிப்படியாக உயர்த்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து அங்கும் மூன்று வகை தீர்ப்புகளை கொடுக்க வைத்தது ராமர் கோயில் விஷயத்தை குரங்கு ஆப்பம் திண்ற கதையாக்கியது. காங்கிரஸ் இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது உச்ச நீதிமன்றத்தில் பலமுறை வாய்தா கேட்டு இதை எவ்வளவு காலமாக தாமதப்படுத்த முடியுமோ அவ்வளவு தாமதப்படுத்தி வந்தது. காங்கிரசும் அதன் வழக்கறிஞர் கபில் சிபிலும்! காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்பது போல கனத்த இதயத்தோடு சரித்திர கால ஆவணங்களை எல்லாம் தந்து ஹிந்து இயங்கங்கள் தரப்பில் வாதம் செய்து வந்தோம்! காலம் காலமாக ஹிந்து தேசியத்திற்கு பாரத நாட்டின் போலி மதவாதி ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்கெல்லாம் விடுதலை கொடுத்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி!
அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் அழுத்தமாக 370க்கு விடை கொடுத்தோம். சில மாதங்களுக்கு முன்பு முத்தலாக் எத்திசைக்கு சென்றது என்று எட்டு திசையும் தேடும்படி செய்தோம். மூன்று மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றபோது நாடே ஆரவாரம் செய்தது. ஆதரவு தெரிவித்தது முடியாது என்று நினைத்த 370யை காலி செய்துவிட்டார்கள் இந்த சங்கிகள், இனி அயோத்தியா இவர்களுக்கு எம்மாத்திரம் என எதிர்ப்பாளர்கள் எழுதினார்கள். காரணம் 370 அரசியல் அதை விடுவிப்பதே அவ்வளவு எளிதல்ல அதையே முதலில் பலமற்ற ராஜ்யசபாவில் நோட்டம் விட்டு போக்கு காட்டி வெற்றி பெற்று வலிமையான லோக்சபாவில் ஜஸ்ட் லைக் தட் வெற்றி பெற்று காட்டினோம். அயோத்தி பிரச்சினை சட்ட ரீதியானது. இதில் நமக்கு சாதகமான விஷயங்களே. அத்தனையும் அயோத்தியா ஆதாரங்களின் ஆழ்கடல் சான்றுகளின் சாம்ராஜ்யம், ஆவணங்களின் ஆயுதக்குவியல். தேசத்தை மதிக்கும், சட்டத்தை விசுவாசிக்கும் தைரியமான நீதிபதிகள் யாராக இருந்தாலும் இதில் நியாயமான தீர்ப்பைத்தான் வழங்க முடியும்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. நீதிமன்றங்களும் வழக்குகளை தேக்கி வைத்து துர்நாற்றம் அடிக்கும் சாக்கடைகள் ஆக மாற விரும்பவில்லை. நீதியரசர் மாண்புமிகு ரஞ்சன் கோகாய்க்கும் நாலு நீதிபதிகளுக்கும் இந்த நாடு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது உண்மையைத்தானே சொன்னார்கள். உள்ளதைத் தானே சொன்னார்கள்? என்று நீங்கள் கேட்கலாம் இன்று உண்மையை சொல்வது கூட அரிதாகி வருவதால்தான் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள். பாஜக அரசு “ரேங்கல் தீர்ப்பு வாங்கல் தீர்ப்புக்” கூடாது என்று நினைப்பதை உணர்ந்த நீதிமன்றங்கள் தீர்ப்பை தள்ளிப் போடுவதை தள்ளிப்போட்டன. அதனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்தது. இதில் சந்தோஷமான சுந்தரமான விஷயம் என்னவென்றால் இத்தீர்ப்பை திரித்துக் கூறும் வக்கிரபுத்திக் காரர்களுக்கு நீதிபதிகள் வாய்ப்பே கொடுக்கவில்லை.
முதலில் ஷியா வக்பு வாரியத்தை வழக்கிலிருந்து விடுவித்தார்கள். சன்னி மக்கள் சந்தோஷப்பட்டார்கள். நிர்மோகி அமைப்புக்கு சொந்தமில்லை என்றார்கள். இது நடுநிலை என மக்கள் கொண்டாடினார்கள். புராணங்களை அடிப்படையாக ஆதாரமாக நீதிமன்றம் எடுக்க முடியாது என்றார்கள். தி.க., திமுக கம்யூனிஸ்ட்டுகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் குதித்தார்கள். பாபர் மசூதி தான் கட்டப்பட்டது என்றார்கள் அனைத்து முஸ்லிம்களும் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது என்றது தீர்ப்பு. முஸ்லீம் தீவிரவாதிகள் நெஞ்சில் பால் வார்த்தது போல உணர்ந்தனர். மசூதி வெறும் தரையில் கட்டப்பட்டது அல்ல அதன் கீழ் வேறு கட்டடம் இருந்தது என்றார்கள். ஆக கோயில் இருந்ததாக சொல்லவில்லையே என இடதுசாரி தொல்லியலாளர்கள் பரவசம் அடைந்தார்கள். இப்படி படிப்படியாக பட்டிமன்றம் சாலமன் பாப்பையா எந்தப் பக்க தீர்ப்பு சொல்லப் போகிறார் என்பது யாருக்கும் புரியாமல் தெரியாமல் பேசுவது போல நீதிபதிகள் ஒவ்வொரு வரியையும் ஒரு பிரேக்கிங் நியூஸ் ஆக்கினார்கள். இறுதியில் அயோத்தி ராமர் கோயில் கட்டிடம் ராமபிரானுக்கு சொந்தம் என சொன்னதோடு இந்திய நாட்டின் உண்மையான மதசார்பின்மை க்கு எடுத்துக்காட்டாக பாபர் மசூதி கட்ட முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள். ஆக இந்த தீர்ப்பு நியாயமானது நேர்மையானது என்பதை விட மிகவும் பரபரப்பாக சொல்லப்பட்ட நேர்த்தியான தீர்ப்பு. இது பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மற்றுமொரு முக்கியமான வாக்குறுதியை கத்தியின்றி ரத்தமின்றி சட்ட வழிமுறையில் நிறைவேற்ற உதவிய தீர்ப்பு.