தில்லியிலிருந்து கூட்டம் கூட்டமாக ஆயிரக் கணக்கில் கட்டிடத் தொழிலாளர்கள், தங்கள்
சொந்த ஊருக்கு- உத்தர பிரதேசமோ , ராஜஸ்தானோ மூட்டை முடிச்சுக்களுடன் நடந்து
கொண்டிருக்கிறார்கள். இடுப்பில் குழந்தை, கைப் பிடியில் இன்னொரு குழந்தை என்று
தாய்மார்கள் இளைஞர்கள் என்று இவர்கள் படும் இன்னலை தொலைக் காட்சியில்
பார்ப்பதற்கே நமக்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. தார் ரோட்டிலும் வயல் கல் முள் என்று
குறுக்கு வழியிலும் நடக்கும் அவர்கள் படும் பாட்டை கற்பனை செய்து பாருங்கள்.
வட மாநிலங்களில் இப்பொழுது இரவு வேளைகளில் குளிரும் பகல் வேளையில் வெய்யிலின்
கொடுமையும் ஒரு சேர இருக்கும். குழந்தைகளுக்கும் 60 வயதைத் தாண்டியவர்களுக்கும்
தாங்க முடியாத ஒன்று. அப்படித்தான், மும்பையிலிருந்து குஜராத்திற்கு செல்லும் வழியில் ஒரு
முதியவரும் ஒரு சிறுவனும் இறந்திருக்கிறார்கள்.
ஏன் இந்த அவல நிலை? அவர்கள் ஏன் தங்கள் உயிரை பணயம் வைத்து இப்படி புலம்
பெயர்ந்து செல்கிறார்கள்? கொரானா நோய் தாக்கினால் உயிர் போகலாம் என்பது சாத்தியக்
கூறு என்பது உண்மைதான். ஆனால், ஒரு வேளை உணவைத் தள்ளிப்போடலாம், அதிகம்
போனால் இரண்டு வேளை. நாட்கணக்கில் – வாரக் கணக்கில் முடியுமா? அந்த பசிக்
கொடுமை நிச்சயமான முகத்தில் அறையும் உண்மை அல்லவா? அதனால் தான் எப்படியாவது
சொந்த கிராமத்திற்க்கு நெடும் பயணம் மேற்கொள்கிறார்கள். மாநகரங்களில், எந்த மாநிலத்திலிருந்தோ வந்து நாம் சொகுசாக வாழ உயர்ந்த வளாகங்களைக் கட்டிக் கொடுத்து, சொகுசாக பயணிக்க தங்க நாற்கர சாலைகளை மேம்பாலங்களைக் கட்டிக் கொடுத்து விட்டு இன்று அவர்கள் நம் மேல் நம்பிக்கை இல்லாததால் தானே அவர்கள் சொந்த மண்ணைத் தேடி ஓடுகிறார்கள்? மனம் வலிக்கிறதே. இந்த இடத்தில் ஒன்றை நினைத்துப் பாருங்கள். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுதும் மனப் பூர்வமாக ஏற்கப்பட்டு முழுமையாக – செம்மையாக நடைமுறை படுத்தப்பட்டிருந்தால், அவரவர் வேலை நிமித்தம் வசிக்கும் பகுதியிலேயே குறைந்த பட்ச உணவாவது கிடைத்திருக்குமே? உள்ளூர் மக்களுக்கு ஒப்ப இவர்களும் பயன் பெற்றிருப்பார்களே? இன்னும் பல பயன்களைச் சொல்ல முடியும். (அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.