சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPHO) என்பது இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான உலகின் முன்னணிப் போட்டிகளில் ஒன்றாகும். இது, கோட்பாடு மற்றும் செய்முறை இயற்பியலில் போட்டியிடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள சிறந்த மாணவர்களை ஒன்றிணைக்கிறது,
பாரதத்தின் சமீபத்திய செயல்பாடு, இப்போட்டியில் அதன் தொடர்ச்சியான சாதனையை நீட்டிப்பதோடு, இந்த ஆண்டுப் பதிப்பில் சிறப்பாகச் செயல்படும் நாடுகளின் வரிசையில் பாரதத்தையும் இடம் பெற செய்துள்ளது.
கொலம்பியாவின் புகாரமங்காவில் நடைபெற்ற 56வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPHO)2026 போட்டியில், பாரத அணியின் ஐந்து உறுப்பினர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதை அடுத்து, முதல் இடத்தையும் பகிர்ந்து கொண்டது.
ஹோமிபாபா அறிவியல் கல்வி மையத்தின் தகவல்படி, பங்கேற்ற 87 நாடுகளைச் சேர்ந்த 381 மாணவர்களில் பாரதம், சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, தென்கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது.
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமான HBCSEயின்படி, இது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாடில் பாரதத்தின் 27ஆவது பங்கேற்பாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு பாரதியரும் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்துடன் திரும்பி உள்ளனர். தங்கப்பதக்கம் வென்ற பாரதிய மாணவர்கள் – கனிஷ்க் ஜெயின் (புனே), ரித்தேஷ் ஆனந்த் பெண்டாலே (இந்தூர்), ரிஷித் கார்க் (துவாரகா), ஸ்ரேஷ்ட் சுரையா (மும்பை), ஸ்வரித் ஜோஷி (குஜராத்) ஆகியோர்.
பாரத பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், “இளைஞர்களின் இந்த அசாத்தியமான சாதனை, நம் நாட்டின் ‘யுவ சக்தி’ ஆற்றலின் எல்லையற்ற திறனுக்கும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வத்திற்கும் மற்றொரு எடுத்துக்காட்டாகும்” என்றார்.
கடந்த பத்தாண்டுகளாக சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் தளத்தின் பல்வேறு பதிப்புகளில், நமது மாணவர்கள் தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
பலதரப்பட்ட பயணங்களும், சமூக நடவடிக்கைகளும், மாணவர்கள் தாங்கள் செல்லும் நாட்டின் கலாச்சாரத்தில் முழுமையாக ஈடுபடவும், உலகெங்கிலும் உள்ள சக மாணவர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன. கோட்பாடு மற்றும் செய்முறை இயற்பியலில் உள்ள அறிவு பகுப்பாய்வு திறன்கள், திறனாய்வு சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மிக உயர்ந்த மட்டத்தில் ஆராய்வதே IPHO வின் முதன்மை நோக்கமாகும்.
இது 1967 ஆம் ஆண்டு, போலந்தின் வார்சா நகரில் தொடங்கி அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. தங்கப் பதக்கங்களை வென்ற ஐந்து மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பாரதம் மீண்டும் பெருமை கொள்கிறது.
கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ ராஜாராமன்