‘இசைப் பேரரசி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியுள்ளார். எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, 1916 செப்டம்பர் 16ல் மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே சுப்புலக்ஷ்மிக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. இசையில் அவரின் முதல் குரு அவரது தாயார்தான். பின்னர் புகழ்பெற்ற செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் கர்நாடக சங்கீதமும், பண்டிட் நாராயணராவ் வியாசிடம் ஹிந்துஸ்தானி இசையையும் கற்றார். 1926ல் அவருடைய தாயாரின் வீணை இசையில் இவரின் பாடலும் இணைந்து முதல் இசைத்தட்டு வெளியானது. 1929ல் இவருடைய முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேறியது.
1966ல் ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கிலப் பாடலை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை போன்றவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய சிறந்த பாடல்களில் சில.
1938ல் சேவாசதனம் என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, பின்னர், சகுந்தலை, சாவித்திரி, மீரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மீராவில் இவர் பாடிய காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன், கிரிதர கோபாலா போன்ற பாடல்கள் கேட்பவர்களை உருக வைத்தது.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, கல்கி சதாசிவத்தை 1940ல் திருமணம் செய்து கொண்டார். சதாசிவம் இலக்கியம், இசை போன்றவற்றில் பிரியராக மட்டுமல்லாமல், இசைக் கற்றவராகாவும் இருந்தார்.
பாரதத்தின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார் எம்.எஸ். 1997ல் கணவர் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட 2004ல் தன்னுடைய 88வது வயதில் மரணம் அடைந்தார். தான் பாடி ஈட்டிய பெரும் செல்வத்தை தானமாக ஆன்மீக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி.