அண்ணாமலை வீடு அருகே கொடிக்கம்பம் வைக்க எதிர்ப்பு தெரிவித்த தமிழக போலீசார், திருச்செங்கோட்டில், 60 அடி உயர கம்பத்தில் தி.மு.க., கொடியை ஏற்ற அமைச்சர் உதயநிதிக்கு அனுமதி அளித்தது எப்படி என, தமிழக பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக பா.ஜ., இளைஞர் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது:
சென்னை கானத்துாரில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வீட்டு வாசலில் வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை, இரவு, 12:00 மணிக்கு மேல், ஜே.சி.பி., இயந்திரம் வரவழைத்து போலீசார் அகற்றினர். அது தொடர்பாக நடந்த பிரச்னையை மையமாக வைத்து என்னை கைது செய்தனர்.
தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டுக்கு ஆட்களை திரட்டுவதற்காக, சேலம், கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, திருச்செங்கோடு ஒன்றியம், பால்மடை சந்திப்பில், 60 அடி உயர கொடிக் கம்பத்தில் தி.மு.க., கொடி ஏற்றி உள்ளார். பா.ஜ., கொடிக் கம்பம் அமைத்தது தவறு என்று கூறி, அதை அகற்றி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், தி.மு.க., கொடிக் கம்பத்தை அகற்றுவார்களா? அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுப்பார்களா? அதை செய்யவில்லை என்றால், போலீசார் ஒருதலைபட்சமாக நடக்கின்றனர் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
திருச்செங்கோட்டில் கொடிக் கம்பம் அமைக்க, தி.மு.க., யாரிடமும் அனுமதி பெறவில்லை. அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை, அரசியல் சட்டத்தின் அடிப்படையில், பதவி ஏற்ற அமைச்சர் உதயநிதி மதிக்காமல் செயல்படலாமா? அப்படியென்றால், அவர்களுக்கு மட்டும் தனி சட்டமா? எங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் நியாயம் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.