காஞ்சிபுரத்தில் நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
வரதர் கோயிலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், சுவாமி தரிசனம் செய்யவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வருகை தர இருப்பதாக தகவல்கள் வந்ததையடுத்து, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. காவல்துறையின் சார்பில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பின்னர், வரதர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் முதல்வர், கோயில் வளாகம், தற்காலிகப் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தேன். கோயில் வளாகத்தில் 2,600 மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற்பந்தலும், சுமார் 8 ஆயிரம் பேர் இளைப்பாறிச் செல்லும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆகம விதிப்படி தொன்று தொட்டு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அவையனைத்தும் அப்படியே பின்பற்றப்படும். அத்திவரதர் ஜூலை 1-ஆம் தேதி முதல் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
நின்ற கோலத்தில் காட்சியளிக்கும்போதும் பக்தர்கள் கூடுதலாக வருவார்கள் என முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப போதுமான அனைத்து வசதிகளும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.