அர்த்தமற்ற ஆங்கிலேய ஆண்டு அல்ல… சித்திரையே நமது புத்தாண்டு!

ஒரு சொல்வழக்கு உண்டு. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று. ‘சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களாலும் ஆதிக்க சக்திகளாலும் எழுதப் படுவது’ – என்று ஒரு அறிவுஜீவித்தனமான நிர்ணயமும் உண்டு. தேடித் தேடி, ஆதாரங்களைத் திரட்டி எழுதப்படும் வரலாற்றுப் பதிவுகள் ஒரு வகை. எந்த சக்தி ஒரு கொடூரமான ஆக்கிரமிப்பை ஒரு தேசத்தின் மீது திணிக்கிறதோ, அந்த ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்படும் ‘உண்மைகள்’ வேறு வகை. தாங்கள் எதை நம்புகிறார்களோ அதை, தாங்கள் எதை வாழ்வியல் வழிமுறைகளாக ஏற்கிறார்களோ அதை, தாங்கள் வெற்றிகொண்ட நாட்டு மக்களின் மீது திணித்து, ஏதோ அதுதான் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் முறையோ என்று அனைவரையும் மயங்க வைக்கும் யுக்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குக் கைவந்த கலை. அது அப்படி நம் மீது திணித்த ‘மயக்கங்களில்’ ஒன்றுதான் இந்த ‘HAPPY NEW YEAR’ கொண்டாட்டம். இது கிறிஸ்தவ சம்பிரதாய நாள்காட்டியுடன் சம்பந்தப்பட்டுள்ளதா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

சர்ச் செய்யும் சர்ச்சை:

EASTERN ORTHODOX LITURGICAL CALENDAR – என்பதை சம்பிரதாய முறையில் சர்ச்சுகள் பின்பற்ற வேண்டிய வழிமுறை நாள்காட்டி என்று மொழி பெயர்க்கலாம். இதன்படி செப்டம்பர் 1ல் இருந்துதான் புத்தாண்டு பிறக்கிறது. EASTERN ORTHODOX CHURCH பின்பற்ற வேண்டிய விரதங்கள், விருந்துகள் இவற்றுக்கான விதிமுறைகளை இந்த நாள்காட்டி வகுக்கிறது. இதன்படி ஜனவரி 1 – ஒரு மதரீதியான ‘விடுமுறை நாள்’ (RELIGIOUS HOLIDAY) அல்ல. ஆனால் அது ஒரு ‘விருந்து’ நாள். (A DAY OF FEAST). ஏன் தெரியுமா? அன்றுதான் ஏசு பிறந்து 8ம் நாள் அவருக்கு ‘விருத்த சேதனம்’ (‘சுன்னத்’) செய்யப்பட்ட நாள்! அதை நாம் ‘கேக்’வெட்டிக் கொண்டாடுகிறோம்!

அறிவியலும் இல்லை, ஆன்மிகமும் இல்லை :

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தும், அல்லது மறைந்தும் உள்ள பல்வேறு நாகரிகங்கள் பல்வேறு புத்தாண்டுகளை தங்களுக்கு என்று கொண்டாடி மகிழ்ந்து வந்துள்ளனர். அதன் பல வடிவங்களில் ஒன்றுதான் ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு என்பதே தவிர, அது ஏதோ ‘ஆர்கிமிடீஸ் தத்துவம்’ போல ‘பிதாகரஸ் தேற்றம்’ போல முடிவான விஞ்ஞானக் கோட்பாடு இல்லை. இன்னும் நாம் மேலே சொன்னது போல ORTHODOX CHURCH விதித்து உள்ளபடியே அது RELIGIOUS HOLIDAYவும் அல்ல. அது குறிப்பிட்ட இனத்தாரின் வழக்கப்படி ஆண் குழந்தை பிறந்த எட்டாம் நாள் அதன் பிறப்பு உறுப்பில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை நாள் (DAY OF CIRCUMCISION). அதுதான் ஜனவரி 1! அதை ஏதோ நம் தலையில் ஏற்றி வைத்துக்கொண்டு, ஆகம விதிகளை மீறி கோயில் நடைதிறப்பதும், சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதும் எந்த வகையில் நம் மரபுக்கு உகந்தது ஆகும்? வீட்டிலேயே கூட, இந்த ஜனவரி 1ம் நாளை ஏதோ புத்தாடை உடுத்தி, கேக் வெட்டி, ஒருவரை ஒருவர் வாழ்த்தி, பெரியவர்களிடம் ஆசி பெறுவது என்பது எப்படி பகுத்தறிவுக்கு உகந்தது ஆகும்? உலகில் ஒவ்வொரு நாடும், இனமும், நாகரிகமும் தமக்கு என்று பின்பற்ற வேண்டிய விழுமியங்களை வைத்துள்ளதோ அப்படியே எமக்கு என்று ஒரு தனித்தன்மை கொண்ட கலாச்சார விழுமியம் உண்டு என்று நாம் நெஞ்சு நிமிர்த்தி சொல்ல வேண்டாமா?

பன்முகத் தன்மை” – பல்வேறு கலாச்சாரங்களையும் மதிக்கும் சகிப்புத் தன்மை” என்றெல்லாம் வாய் கிழியப் பேசும் அறிவு ஜீவிகள், நம் கலாச்சாரத்துக்கு சற்றும் இந்த கலாச்சார சுமை நம் தலை மீது திணிக்கப்படுவதை ஏன் கண்டு கொள்வதில்லை?

பகுத்தறிவு புத்தாண்டு :

நமது புத்தாண்டு சித்திரையில் தொடங்குகிறது. சூரிய நிலைகளை வைத்து SOLAR CALENDAR அமைகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். சூரியன் முதல் ராசியான மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு நகரும் மாதம் முதல் மாதமாக கணக்கிடப்பட்டு ‘சித்திரை’ என்று அழைக்கப்படுகிறது. இது போக சூரியனின் சஞ்சாரம் தெற்கு நோக்கிய பாதையில் – தட்சிண அயணம்- முடிவடைந்து அது வடக்கு நோக்கிய பாதையில் – உத்தர அயணம்- பயணத்தை தொடங்கும் நாள் மகர சங்கராந்தி”. தெற்கு கோடியில் மகர ரேகையை தொட்டு மீண்டும் வடக்கு நோக்கி சூரியன் நகரத் தொடங்கும் நாள். (அயணம் என்றால் பாதை – ராம அயணம் – ராமனின் பாதை). இந்த மகர சங்கராந்தியை பாரத தேசம் முழுதும் விவசாயப் பெருங்குடியினர் மகிழ்ந்து கொண்டாடுவதைப் பார்க்கிறோம். எனவே இந்த தை முதல் நாள்தான் ‘தமிழ்’ப் புத்தாண்டு என்று ஒரு குழுவினர் குரல் கொடுப்பதைக் கூட ஒரு வாதத்துக்காக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது! அதில் ஒளிந்திருக்கும் ‘திராவிட’ அரசியலைக் கடந்து ஒரு வாதம் என்ற அளவில் அதைப் பொறுமையோடு நம்மால் அணுக முடிகிறது. ஆனால் பிறந்து எட்டாம் நாள் ஒரு குழந்தைக்கு ஏதோ ஒரு அந்நிய இனத்தாரின் வழக்கப்படி ‘விருத்த சேதனம்’ செய்யப்பட்ட நாளை எந்தப் பகுத்தறிவு அளவுகோலின் படியும் நம்மால் நெருடல் இல்லாமல் ஏற்க முடியவில்லை!

 

திபெத்திய புத்தாண்டு

திபெத்தியர்களின் புத்தாண்டுக்கு ‘லோஸார்’ என்று பெயர். அது ஜனவரி – மார்ச் வரை என்று வேண்டுமானாலும் வரும். திபெத் மட்டுமல்ல, பூடான், சிக்கிம், நேபாளம் இங்கெல்லாமும் லோஸார் புத்தாண்டு உண்டு. ஹிமாலய மலைப் பகுதிகளில் வாழும் ‘ஷெர்பா’ – ‘தாமங்’- குருங்’ உள்ளிட்ட பழங்குடியினருக்கு இது மிகவும் முக்கியமான பண்டிகை. வரும் 2017 ல் லோஸார் புத்தாண்டு 2017 பிப்ரவரி 27 அன்று வருகிறது. (அது திபெத்திய ஆண்டு 2144).

 

பழமை வாய்ந்த பாபிலோனிய புத்தாண்டு

சூரியன் வடக்கு திசை நோக்கி நகரும் காலத்தில் – இதை நாம் ‘உத்தராயணம்’ என்கிறோம்- பூமத்திய ரேகையை அது கடக்கும் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இதை EQUINOX என்பார்கள். அதற்கு பிறகு வரும் முதல் அமாவாசைதான் பாபிலோனியர்களுக்கு புத்தாண்டு! அதாவது மார்ச் 19 – மார்ச் 21 வரை ஏதோ ஒருநாள் நாம் பின்பற்றும் காலண்டர் படி!

 

சீனப் புத்தாண்டு

இதுபோக வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின்படி வெவ்வேறு புத்தாண்டுகளை வைத்துள்ளனர். சீனப் புத்தாண்டு நிலவின் சஞ்சாரத்தை கொண்டு (LUNAR) அமைகிறது. வசந்த ருது தோன்றியதும் வரும் முதல் அமாவாசை சீனர்களுக்கு புத்தாண்டு. அது ஜனவரி 21 முதல் பிப்ரவரி 21 வரை ஏதோ ஒருநாளில் சந்திரனின் நிலையைப் பொறுத்து அமையும்.