“தமிழகத்தின் சபரிமலை” என அழைக்கப்
படும் “மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில்” திருவிழா, 1982 பிப்ரவரி 28ல், கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவுக்காக ஒலிபெருக்கியில் பக்தி பாடல் இசைக்கத் தொடங்கியதும், கடற்கரை மீனவர் கிராமத்தில் உள்ள சகாயமாதா சர்ச்சில், பகவதி அம்மன் கோயிலை நோக்கி வைக்கப்பட்ட ஒலிபெருக்கியில் அதிகமான சத்தத்துடன் கிறிஸ்தவ பாடல்கள் ஒலிபரப்பத் தொடங்கியது. இதனால், திருவிழாவிற்கு இடையூறு ஏற்பட்டது. ஏற்கனவே, காவல்துறை அவர்களிடம் திருவிழா முடியும் வரை சில வரையறைகளை வகுத்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுகளை மீறியே, கிறிஸ்தவர்கள் பாடல்களை ஒலிபரப்பி இடையூறு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.
1982 மார்ச் 1 அன்று மாலை 6 மணிக்கு, 50 பெண் பக்தைகள் கடலில் குளிக்க போன போது, கிறிஸ்தவர்களால் மானபங்கம் செய்யப்பட்டனர். 9 பெண்கள் நிர்வாணமாக காயங்களுடன் தப்பி வந்தனர். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒரு பேனரை கிழித்து, ஒரு பெண்ணுக்கு உடலை மூடிக்கொள்ள கொடுத்தார். மாலை 7 மணிக்கு, திடீரென 5 சர்ச்சுகளில் மணிகள் அடிக்கத் துவங்கியது. ஆயிரக்கணக்கில் மீனவர்கள் ஒன்றுகூடி, மீன் வெட்டும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அம்மன் கோவிலை நோக்கி வந்தனர். இவர்கள் பக்தர்களை துன்புறுத்தவே, போலீசார் தடியடி நடத்தியும் பயனில்லாமல் போகவே துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
திருவிழா நடப்பதை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என அங்குள்ள கிறிஸ்துவ மீனவர்களைத் தூண்டி விட்டு, வன்முறைச் செயல்களில் ஈடுபடச் செய்ததோடு அல்லாமல், அந்த வன்முறையை அடக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பொழுது, அதில் உயிர் இழந்தவர்களை “தியாகிகள்” ஆக்குகின்ற விதத்தில் மௌன ஊர்வலங்களை நடத்தியும், பிறகு கடலில் குளிக்க சென்ற ஹிந்து பக்தர்களை குளிக்க விடாமல் தடுப்பதற்கு என, பத்தாயிரம் மீனவர்களை பலவிதமான ஆயுதங்களோடு கொண்டுவந்து நிறுத்தி, கடற்கரையில் ஒரு வன்முறை நாடகத்தை நடத்தியவர்களான கிறிஸ்துவப் பாதிரிமார்கள் வன்முறை தலை விரித்தாடிய போது ‘சுவிசேஷப் பிரசங்கம்’ செய்தார்கள்.
கன்யாகுமரி மாவட்ட கத்தோலிக்க பிஷப் டாக்டர் சி.எஸ்.ஐ. ஆரோக்கிய சாமி, பிஷப் கிருஸ்துதாஸ் ஆகியோர் கூட்டாக குமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு வெளியிட்டுள்ள ஒரு வேண்டுகோளில் கீழ்கண்டவாறு கூறினர்.
“கன்யாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பஸ்களை நிறுத்துதல், கல் எறிதல், பொருள்களைப் பறிமுதல் செய்தல் போன்ற பல வன்முறை செயல்கள் நடைபெற்று வருவதை அறிந்து வேதனை அடைகின்றோம். அன்பையும், அமைதியையும் இவ்வுலகிற்கு கொணர்ந்த இறைமகன் ஏசுவைப் பின்பற்றியும் நாம் எந்த விதமான வன்முறைச் செயல்களை கையாளவோ, தூண்டவோ கூடாது என கிறிஸ்துவின் பெயரால் அன்புடன் கேட்டு கொள்கிறோம்”.
அவர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கையே, வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் என்பதை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.
பட்டியல் சமூக மக்கள் நடத்திய கோயிலுக்குத் தீவைப்பு
மண்டைக்காடு அருகே கீழ்க்கரையில் பட்டியல் சமூக மக்கள் நடத்திய தனியார் ஆலயம் ஒன்று மார்ச் 9-ந் தேதி இரவு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நாகர்கோயிலுக்கு பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜாக்கமங்கலம் என்ற ஊரில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மார்ச் 12-ந் தேதி அன்று, ஈத்தா
மொழி என்ற பகுதியில் புகுந்து சூறையாடிய கிருஸ்த்துவ மீனவர்கள் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்த ரூ. பதினாறு லட்சத்திற்கும் அதிகமானப் பொருட்களை, கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாக ஹிந்துப் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ராஜக்கமங்கலம் மற்றும் ஒரு கிராமத்தைச் சார்ந்த கிருஸ்த்துவ மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஈத்தாமொழிக்குப் படை எடுத்துச் சென்று முப்பது கடைகளை சூறையாடியதாகவும், 25 வீடுகளுக்குத் தீ வைத்ததாகவும் செய்தி வந்துள்ளது. அங்குள்ள ஒரு தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தில் இருந்த தட்டெழுத்து இயந்திரங்கள் நாசமாக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன என்றும் அச்செய்தி கூறுகின்றது. இந்தக் தாக்குதலில் நாட்டு வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் அதற்குப் பிறகு அந்த மீனவர்கள் கட்டு மரங்களில் ஏறி கடலுக்குள் தப்பிச் சென்றனர் என்றும் ஹிந்துப் பத்திரிகையில் வெளியாகியுள்ள அந்த செய்தி கூறுகின்றது.
பி.டி.ஐ. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, தர்மபுரம் கிராமத்தில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது. அழிக்கல் கிராமத்தில் தாக்குதலின் போது பயங்கரமான வெடிப்பொருட்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. பழவன்விழை கிராமத்தில் உள்ள ஒரு கோயில் நாசமாக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் சுற்றுப்பயணம் செய்து நீடித்த சுமுக நிலையை உருவாக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வேண்டு கோள் விடுத்தது.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.நாராயணராவ், துணைத் தலைவர்
ஆர்.வி.சேஷாத்திரி, செயலாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் இப்பகுதி
களில் நிலைமையை நேரில் கண்டறிய சுற்றுப்பயணம் செய்தனர். அவர்கள் சென்னை திரும்பி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கொண்டுள்ள வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,
1945ல் திருவாங்கூர் அரசு, மண்டைக்காடு திருவிழாவின் 10 நாட்களிலும் எந்தவிதமான கிறிஸ்தவ கூட்டங்கள், விழாக்கள் நடைபெறக்
கூடாதென உத்தரவிட்டது. அண்ணா முதல் அமைச்சராக இருந்த போது, 4-.1-.1968-ல் போட்ட அரசு உத்தரவில், மண்டைக்காடு கடற்கரையில் “தீர்த்த கட்டம்” கட்டி, அதனை பகவதி அம்மன் பக்தர்கள் புனித நீராட பயன்படுத்த அனுமதி வழங்கினார்.
இம்முறை விழாவுக்கு 2 மாதம் முன்னதாகவே இந்த வருடம் விழா நடைபெற விடமாட்டோம் என்று சிலர் கூறி வந்ததால், அதிக போலீஸ் பாதுகாப்பு தேவையென விழா கமிட்டியினர் கேட்டிருந்தும், சரியான பாதுகாப்பு தர அதிகாரிகள் தவறி விட்டனர்.
28-2-82 அன்று விழா துவங்கிய போது, கிறிஸ்தவ மீனவர்கள் ஓலி பெருக்கி வைத்து பாடல்கள் போட்டு ஊறு செய்தனர். போலீசிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வந்து ஒலிப்பெருக்கியை நிறுத்தினர். ஆனால், போலீசார் போன பின் மீண்டும் ஒலிப்பெருக்கி பாடத் துவங்கியது.
கடலில் ஹிந்துக்கள் குளிக்க போக வேண்டாம் என்று முதல் அமைச்சர் விடுத்த வேண்டுகோள் ஹிந்துக்களை மிகவும் புண்படவும், ஏமாற்றமடையவும் வைத்தது. காலங்காலமாக தங்களுக்கு இருந்த புனித நீராடும் உரிமை பறிபோவதை கண்டு அவர்கள் வருந்தினர். ஒவ்வொரு தடவையும் சிறு தகராறை மூட்டி கடலில் குளிப்பதை தடுக்க வழி செய்யும். சில காலமாக குமுறல் இருந்தது தெரிந்தும், போலீசார் தகுந்த பாதுகாப்பு கொடுக்கத் தவறி விட்டனர். 15 போலீசாரே அன்று காவலுக்கு நின்றனர். அரசு தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் துப்பாக்கி சூட்டையே தவிர்த்திருக்கலாம். மேலும் இதுபற்றி உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட அதிகாரிகள் பாரபட்சம் காட்டுபவர்
களாகவும், நிர்வாக அனுபவமற்றவர்களாகவும் உள்ளனர். எனவே உயர் அதிகாரிகள் மாற்றப்
பட்டு, திறமை வாய்ந்த நடுநிலைமையான அதிகாரிகள் மூலம் நிலைமையை சமாளிக்க வேண்டும், மதத் தலைவர்கள் கூடிப் பேசி மத ஒற்றுமை, அமைதி ஏற்படுத்த வேண்டும்.
அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை
குமரி மாவட்டத்தில் ஹிந்துக்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். தலைவர் வி. ரங்கசாமித் தேவர் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.-
“குமரி மாவட்டம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள். இன்னமும் தொடர்ந்து ஹிந்துக்களைத் தாக்கி வருகிறார்கள். மார்த்தாண்டம், தக்கலை, ஈத்தா
மொழி, ராஜாக்கமங்கலம், ஈசந்தங்கள் போன்ற பல ஊர்களில் ஹிந்துக்கள் பலரும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் கிறிஸ்தவ வெறியர்களால் தாக்கப்பட்டு, பலர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். காவல்துறை
யினரும் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகத் தகவல்கள் வந்த வண்ணமிருக்கின்றன.
குமரி மாவட்டத்தில் ஹிந்துக்கள் அச்சம் நீங்கி தன்மானத்துடனும், கௌவரத்துடனும் வாழ அரசும் ஆட்சியிலுள்ளவர்களும் உடனடி
யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தமது அறிக்கையில் வி. ரங்கசாமித் தேவர் கூறி இருந்தார்.
-விஜய பாரதம், 19/03/1982