மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியிருந்தது. இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அமலாக்கத்துறையின் காவல் இன்றுடன் முடியும் நிலையில், இன்று ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.,15 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் பகவத் கீதை மற்றும் புத்தகங்களை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.