தமிழக வரலாற்றில் சங்க காலத்துக்கும் (முற்கால சேர, சோழ, பாண்டிய அரசுகள்) பிற்கால பக்தி காலத்துக்கும் (பிற்கால சேர, சோழ, பாண்டிய அரசுகள்) இடைப்பட்ட சுமார் 500 ஆண்டுகள், முழுமையான அரசு நிலவாத காலகட்டமாகக் கருதப்படுகிறது. பொதுவாக அந்தக் காலத்தை களப்பிரர்கள் காலம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் பண்டைக்கால தமிழகம் வளர்ச்சியின்றியும், சரியான தலைமையின்றியும் இருந்தது. முற்கால களப்பிரர்கள் காலம் என்று அதனைக் குறிப்பிடலாம் போலிருக்கிறது. ஏனெனில், இப்போது அதேபோன்ற ‘பிற்கால களப்பிரர் காலம்’ என்று சொல்லத் தக்க விதத்தில் தமிழக அரசியலிலுக்கு எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலைமை.
தற்போதைய செயலின்மைக்கு நேர்மாறான காட்சி, 60 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நிலவியது. ஹிந்தி எதிர்ப்பும் பிராமண எதிர்ப்பும் திராவிட அரசியலாக அவதாரம் எடுத்த காலம் அது. தமிழகத்தில் 1950-களில் உச்சம் பெற்ற திராவிட அரசியல், அதன் அதீத தேசிய எதிர்ப்பு, இனவாதச் சிந்தனைகளால் நாடு முழுவதும் கவனம் பெற்றது. மேடைத் தமிழின் அலங்காரப் பேச்சுகளால் மக்களின் ஆதரவைப் பெற்ற திமுக, மக்கள் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்த காமராஜர், பக்தவத்சலம் போன்ற காங்கிரஸ் தலைவர்களை வீழ்த்தியது சரித்திரத்தின் மோசமான பக்கம்.
காங்கிரஸை 1967ல் ஆட்சியிலிருந்து இறக்கியது திமுகவின் சித்தாந்த வெற்றி. ஆனால், 1971 முதல் 2017 வரை நடைபெற்ற ஆட்சி மாற்றங்களில் சித்தாந்தம் என்பது பெயரளவில் மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. கட்சிக் கொள்கைக்காக கொடி பிடித்த தொண்டனையும், சுவரொட்டி ஒட்டிய தொண்டனையும், தொண்டை கிழிய கோஷமிட்ட தொண்டனையும், இப்போது திமுகவிலோ, அதிமுகவிலோ காண்பது அரிது. ஏனெனில், கடந்த பல பத்தாண்டுகளில் அரசியல் லாபம் கொழிக்கும் வியாபாரமாகவும், பணம் படைத்தவர்களின் விளையாட்டு மைதானமாகவும் மாறிவிட்டது. சாப்பாட்டுக்கு ஊறுகாய் போலத் தான் இப்போது திராவிடக் கட்சிகளின் கொள்கைகள் கருதப்படுகின்றன. இந்திய தேசியத்துக்கு எதிராக ஆதாரமின்றி முன்வைக்கப்பட்ட பகட்டான வாதங்கள் பொருளிழந்துவிட்ட நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க வாக்குகளை காசுக்கு விலைபேச இரு பெரும் திராவிடக் கட்சிகளும் முட்டி மோதுகின்றன. இதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்களும், கிடைத்த வரை லாபம் பார்க்கவே விரும்புகின்றனர். இது மிக அபாயகரமான தரவீழ்ச்சி.
இத்தகைய முட்டுச்சந்து போன்ற சூழலில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் திடீர் மறைவு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. எதிர்த்தரப்பிலோ, கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தின் தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக விளங்கிய கருணாநிதி மூப்பு-ஆரோக்கியக் குறைபாடு காரணமாக முடங்கியிருக்கிறார்.
சொல்லப் போனால், அதிகாரபலமே திமுகவை இதுவரை இயக்கி வந்தது. கருணாநிதி அதை திறமையாகக் கையாண்டு அரசியல் நடத்தி வந்தார். அதிகார வேட்கையால் அவர் தேசிய முன்னணி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் தவறவில்லை. அதுவும் ஒருவகையில் திமுகவின் பிரிவினைவாத கோஷத்தை மழுங்கடிக்கச் செய்தது.
மு.கருணாநிதியின் இடத்தை அவரது மகன் மு.க.ஸ்டாலினால் நிரப்ப இயலவில்லை. போதாக்குறைக்கு அழகிரி, மாறன் சகோதரர்கள், கனிமொழி என குடும்ப அரசியலால் திமுக விழி பிதுங்குகிறது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் திமுகவுக்கு கொடுங்கனவாகவே இனிமேலும் இருக்கும்.
அதிமுகவில், சர்வாதிகாரியாக விளங்கிய ஜெயலலிதாவின் திடீர் மரணம், அக்கட்சியில் அதிகாரப் போட்டியை உருவாக்கி, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி (தினகரன்) அணிகளை உருவாக்கியுள்ளது. அதிமுகவைக் கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் நடத்தும் முயற்சிகளுக்கு மாநிலம் முழுவதும் மக்களிடையே எதிர்ப்பு காணப்படுவதால் இப்போதைக்கு தினகரன் அடக்கமாகக் காட்சி தருகிறார். இவர்கள் யாருக்கும் ஓர் அரசியல் கட்சியை எப்படி நடத்துவது என்ற தெளிவு இருப்பதாகத் தென்படவில்லை.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக உருவான மாநிலக் கட்சிகளான பாமக, மதிமுக, தேமுதிக, தமாகா கடசிகளால் மாநிலம் தழுவிய ஆதரவுதளத்தைக் கட்டியமைக்க முடியவில்லை. அதற்கான தலைமைத் திறனும் அக்கட்சிகளின் தலைவர்கள் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகியோருக்கு இல்லை.
காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தில் பொய்க்கால் குதிரையாகி 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன் மாநிலத் தலைவர்கள் மாறும்போது ஏற்படும் கோஷ்டித் தகராறுகள் தான் அக்கட்சி இருப்பதையே வெளிப்படுத்துகின்றன.
தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள பாஜகவோ, தமிழகத்தில் தள்ளாடுகிறது. திட்டமிட்ட செயல்முறை, சிறந்த தலைமை, சித்தாந்தப் பரப்பல் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் பாஜக இப்போதிருப்பதை விட சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆனால், அக்கட்சியும் காங்கிரஸ் அடியொற்றி, கோஷ்டிகானம், ஊடக வெளிச்சம், தொலைநோக்குப் பார்வையின்மை போன்ற அம்சங்களால் பின்தங்கியிருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இரு திராவிடக் கட்சிகளுக்கு பல்லக்கு தூக்கி ஓய்ந்துவிட்டன. தனிப்பட்ட வகையில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் அக்கட்சிகள் ஈடுபட்டாலும், மக்களிடையே அவை நம்பகத்தன்மையை இழந்திருக்கின்றன.
இவையல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் சார்பு கட்சிகள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி போன்ற சிறு ஜாதிகட்சிகள், தமிழக வாழ்வுரிமை இயக்கம், நாம் தமிழர் கட்சி போன்ற பிரிவினை பேசும் சிறு கட்சிகள், இஸ்லாமிய வெறியூட்டும் தமுமுக, எஸ்டிபிஐ, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளும் இயங்குகின்றன. இவை அனைத்துக்கும் மிகச் சிறிய அளவிலேயே மக்கள் ஆதரவு உள்ளது. இக்கட்சிகள், தேர்தல் காலக் கூட்டணிகளில் இடம் பெற மட்டுமே நடத்தப்படுகின்றன.
இவ்வாறாக, தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒருவகையான நிராசையான சூழல் காணப்படுகிறது. இதற்கு அரசியல் களத்தில் நிலவும் தலையற்ற முண்டம் போன்ற தன்மையே காரணம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த டிசம்பர்- ஜனவரியில் மாநிலம் முழுவதும் நடைபெற்றபோது, மக்கள் செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சிகளால் அதை வேடிக்கை பார்க்க மட்டுமே இயன்றது. சமூக ஊடகங்களால் வழிநடத்தப்பட்ட அந்தப் போராட்டங்களின் போக்கை நமது கட்சித் தலைவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழினப் பெருமிதம், பாரம்பரிய மீட்பு, இழந்த உரிமைகளை மீட்கும் வேகம், இளைஞர் சக்தி, போராட்டக் குணம் ஆகிய பல நல்ல அம்சங்கள் இருந்தபோதும், சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும், முறையான பயிற்சி இன்மையாலும், தொலைநோக்கான தலைமை அமையாததாலும், அந்தப் போராட்டம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக இறுதிக்கட்டத்தில் மாற்றப்பட்டு வீணானது.
கடந்த மார்ச் மாதம் நெடுவாசலில் நடைபெற்ற ஹைட்ரோகார்பன் எண்ணை வயலுக்கு எதிரான போராட்டமும் கூட, அதுபோலவே திசைமாறிப் போனது. விவசாயிகளின் மேம்பாட்டை முன்வைத்துப் போராடிய அந்தக் குழுவினருக்கு பல தரப்பிலும் ஆதரவு கிடைத்தது. ஆனால், நடைமுறை சாத்தியத்துக்கு எதிரான போராட்டமாகவும், மத்திய அரசுக்கு எதிரான போர்க்களமாகவும் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் சாயமேற்றப்பட்டன. இதற்கும், சரியான தலைமை இல்லாததே காரணம்.
ஒரு காலத்தில் தேசிய அளவில் மதிக்கப்பட்ட தலைவர்கள் பலர் மாநில அரசியலை நடத்திய இடம் தமிழகம். ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, சுப்பராயன், ஆர்.வெங்கட்ராமன், நெடுமாறன் போன்ற தலைவர்கள் தமிழகத்தின் அடையாளமாக விளங்கியதுண்டு. கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மாநில அரசியலை தங்கள் பிடிக்குள் ஐம்பது ஆண்டுகள் வைத்திருந்தனர். இன்றோ, வழிகாட்டத் தக்க தலைமையின்றி தமிழகம் பரிதாபமாக விழிக்கிறது.
செயலற்ற தன்மையும் மந்த நிலையும் அழிவுக்கே வழிகோலும். அதுவும் மக்களாட்சி முறையில் அரசியல் கட்சிகளே தளகர்த்தர்களாக இருக்கும்போது, கட்சிகளின் மந்தநிலை, மக்களிடையே குழப்பத்தையும் கலகத்தையுமே தோற்றுவிக்கும். இது மாநில நலனுக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லதல்ல.
இந்நிலை விரைவில் மாற வேண்டும்; மக்கள் நலனில் ஆர்வம் கொண்ட புதிய தலைமை மலர வேண்டும். குழப்பத்துக்குப் பிறகு தெளிவு பிறக்கும் என்ற பழமொழி உண்டு. அந்த வகையில், தற்போதைய தெளிவற்ற சூழலிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கும் புதிய ஒளி உருவாகும் என்று நம்புவோம். அதுவரை, தெளிந்த அரசியல் சிந்தனையும், மக்கள் நலம் குறித்த பார்வையும், தேசிய நலனில் அக்கறையும் கொண்ட புதிய தலைமை மலர்வதற்காக, நமது முன்னோடிகள் பாரதி- வ.உ.சி. – சுப்பிரமணிய சிவா போன்றோரை மனதில் இருத்துவோம்! புதிய மாற்றங்களுக்குக் காத்திருப்போம்!
அங்கு முடிந்தது, இங்கு முடியாதா?
குஜராத்தில் 1989-களில் இருந்த குழப்பமான அரசியல் சூழலால்தான் அங்கு பாஜக ஆட்சிபீடம் ஏறியது. இன்று அம்மாநிலத்தில் பாஜக அசைக்க முடியாத சக்தியாக மாறி இருக்கிறது. எனவே, தமிழக பாஜக சகோதரர்கள், தற்போதைய தமிழக சூழலைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், மாற்றத்தை நிகழ்த்த முடியும். திராவிட விஷத்தை முறியடிக்கும் தேசிய மருந்துடன் பாஜக களமிறங்கினால், மோடி என்ற தேசியத் தலைமையின் செல்வாக்கும் சேரும்போது, தமிழகத்திலும் மாற்றங்களை நிகழ்த்த முடியும்.