இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வக்ஃப் சட்டம் பிரிவு 4-ன் கீழ் 2 முறை நில அளவைகள் செய்து ஆட்சேபனைகளை பரிசீலித்து, ஆட்சேபனைதாரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கி அவர்கள் தரப்பு ஆவணங்கள் வாதங்களை கேட்டு அனைத்து விவரங்களையும் மாநில அரசுக்கு அறிக்கையாக அனுப்பி மாநில அரசு ஒப்புதலுடனும் அனுமதியுடனும் மட்டுமே வக்ஃப் சொத்து என்று அறிவிக்கை செய்யவேண்டும் என்பது சட்டம்.
ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து எவ்வித ஆவணமும் இல்லாமல் சட்டத்தையும் விதிமுறைகளையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் கடைபிடிக்காமல் வக்ஃப் சொத்து என்று அறிவிக்கை வெளியிட்டு அப்பாவி மக்களின் சொத்தை ஆக்கிரமித்து அபகரிப்பது வாடிக்கையாகிவிட்டது. வேலூர், திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் திடீரென வக்ஃப் சொத்து என்று அறிவிக்கை செய்து உரிமை கோரிய விஷயத்தில் போராட்டம் வெடித்தது.
இதில் மாநில அரசு தற்காலிக தீர்வு செய்ததைபோல இல்லாமல், சேலம் கபர்ஸ்தான் நில பாதுகாப்பு கமிட்டி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட வகையில் வக்ஃப் சொத்துகள் சம்பந்தமான நில உரிமை ஆவணங்கள், பதிவேடுகள் முழுவதும் யாரும் எளிதாக அணுகி ஆய்வு செய்யும் வகையிலும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வகையிலும் கணினி மயமாக்கப்படவேண்டும், எவ்வித ஆவணங்களும் இல்லாமல் முறைகேடாக வக்ஃப் சொத்து என்று அறிவித்து சொத்துகளை வக்ஃப் வாரியம் அபகரிப்பதை தடை செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.