அன்னியப் பணவரவுக்கு அணை

அன்னிய நிதி வாங்கி, அதை வைத்து பாரதத்தில் குழப்பம் விளைவிக்கப் பார்க்கும் கும்பல்களின் விஷமத்திற்கு முடிவுகட்டவே இன்று பெரிதும் விவாதிக்கப்படும் ‘வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட (FCRA) திருத்த மசோதா’வை மத்திய அரசு கொண்டு வருகிறது. அதை எதிர்ப்போரின் உள்நோக்கத்தை மக்கள் அறிய வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த அலசல்.

 

மசோதா தாக்கல் செய்யப்படும் முன்பே, அதை தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவதில் முனைகிறார்கள் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ ஜந்தர் மந்தரில் செய்த ரகளையேகூட, மசோதா தாக்கல் ஆவதை தடுக்கவே. இது வெளிப்படையாக எழுந்த விமர்சனம். உண்மையில் கிறிஸ்துவ மிஷனரிகளும், சிறுபான்மையினர் அமைப்புகளும், இந்த மசோதாவை தடுக்க ஆன மட்டும் வழி பார்க்கின்றன. குறிப்பாக கிறிஸ்துவ மிஷனரிகள், சுமார் 79 ஆண்டுகளாகவே, பாரத நாட்டில் நடத்திய லீலைகளை அலசியதில் சங்கதி சந்தி சிரிக்கிறது. பாரதத்தைச் சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாட்டு நிதிபெற லைசென்ஸ் போன்றதே `வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்’ (FCRA). இந்த சட்டத்தை வலுவாக்க முன்மொழியப்படும் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், அந்த லைசென்ஸ் முடக்கப்பட முடியும்; கூடவே காலாவதியான ஒரு அமைப்பின் அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்ய இனி வழி பிறக்கும். வரும் வெளிநாட்டு நிதி பாரதத்தின் இறையாண்மை, ஜனநாயகம், தேசிய நலன் உள்ளிட்டவற்றுக்கு பாதகமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே, திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம். 2026 மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் பணி சார்ந்தது.

இந்த ஆண்டு, சுதந்திர பாரதத்தில் மதமாற்றம் குறித்த முதல் முறையான விசாரணையின் 70வது ஆண்டு நிறைவை குறிக்கிறது. கிறிஸ்தவ மிஷனரி செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்
அடங்கிய விசாரணைக் குழு (Christian Missionary Activities Enquiry Committee; இதை நியோகி கமிட்டி (Niyogi Committee) என்றும் அழைப்பார்கள்) 1956 ஏப்ரலில் சமர்ப்பிக்கப்பட்டது. நாக்பூர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியான எம்.பி. நியோகி தலைமையிலான அக்குழு, தனது விசாரணை அறிக்கையில், “அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களைத் தவிர, வேறு எந்த அரசாங்க சார்பற்ற நிறுவனத்திற்கும், வெளிநாட்டு உதவி வழங்குவதைத் தடை செய்ய வேண்டும்” என பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையை இன்றைய நிலவரத்தில் பொருத்திப் பார்த்தால்? அரசு சாரா நிறுவனங்களின் கைகளில் மதமாற்றத்திற்கான வெளிநாட்டு நிதி உதவிக்கு முழுமையான தடை என்பதே அந்த அறிக்கையின் சாரம் என விளங்கும்.
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தில் 2011ல் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, அந்தக் கனவு இப்போது நனவாகும் தருவாயில் உள்ளது. திருத்தப்பட்ட சட்ட விதிகளின் புதிய அட்டவணை, 2010ன் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு கோரப்படக்கூடிய நோக்கங்களை விரிவாக வரையறுக்கிறது. இந்த அட்டவணை மத நடவடிக்கைகளுக்கான வெளிநாட்டுப் பங்களிப்பைத் தடை செய்யவில்லை. உண்மையில், அட்டவணையின் முதல் பிரிவு, “கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள், மடங்கள், யூத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம் / புனரமைப்பு / பராமரிப்பு ஆகியவற்றுக்காக” வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கோரப்படலாம் என்கிறது. ஆக, இது மதமாற்றத்தை மட்டுமே தடை செய்கிறது.

முக்கியமான மாற்றங்களில் ஒன்று, இனிமேல் பதிவுக்கான எந்தவொரு விண்ணப்பமும், கோரிக்கையின் நோக்கத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதாகும். செயல்பாடு மேற்கொள்ளப்படும் மாநில / யூனியன் பிரதேச பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்கிறது அந்த விண்ணப்ப வாசகம். இவ்வாறு வெளிநாட்டுப் பணம் தீயநோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அபாயம் கணிசமாகக் குறைக்கப்படும்.
புதிய விதிகள், ‘நியாயமான செயல்பாடு’ என்பது என்ன என்பதையும் வரையறுக்கின்றன. நியாயமான என்பது, எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. இந்த நிபந்தனை, பதிவு ரத்து செய்யப்பட்டு, புதுப்பித்தல் நிலுவையில் உள்ள அமைப்புகளுக்கு பொருந்தும். அவர்கள், ‘சமூக நலனுக்காக’ தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நோக்கத்திற்காகக் குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சம் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதுவும் போதிய கவனம் பெறாத ஒரு நிபந்தனை. பல்வேறு விதிமீறல்களுக்காகப் பதிவுகள் ரத்து செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மிகப்பெரியதாக உள்ளது.

மதசுதந்திரம் என்பது அனைத்து பாரதியர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்கும் ஒரு போற்றத்தக்க லட்சியம், ஆனால் அது மக்களின் நம்பிக்கையை மாற்றும் உரிமையை உள்ளடக்காது என்பதை மதமாற்றம் செய்பவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். எனவே அன்றைய அரசாங்கத்திற்கு, இந்த நடவடிக்கைகளுக்குச் செல்லும் வளங்களைக் கட்டுப்படுத்துவதே எஞ்சியிருந்த ஒரே வழியாக இருந்தது. புதிதாக இயற்றப்பட்ட FCRA விதிகள், அந்த இலக்கை ஓரளவிற்கு அடைய உதவும். புதுப்பிப்பு மறுக்கப்படுவது போன்ற சூழ்நிலைகளில், அந்த அமைப்பிடம் ஏற்கனவே இருக்கும் வெளிநாட்டு நிதி மற்றும் அந்த நிதியில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை எவ்வாறு நிர்வகிப்பது? என்பதற்கு தெளிவான சட்ட நடைமுறை தேவைப்படுவதால், மேற்படி சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது.

இந்த மசோதா அமலுக்கு வந்தால், வெளிநாட்டு நிதியில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை அரசே கண்காணித்து, நிர்வகிக்க இயலும். அந்த சொத்து வழிபாட்டுத் தலமாக இருந்தால், அந்த இடத்தின் மதத் தன்மை (religious character) பாதுகாக்கப்படுவதை உரிய முறைப்படி உறுதி செய்யப்படும் என்றும் மசோதா கூறுகிறது. அதாவது, குறிப்பிட்ட சூழ்நிலையில் முன் அனுமதி பெற்று வெளிநாட்டு நிதியைப் பெற முடியும்.
கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிற இந்த மசோதா, மதத்தின் அடிப்படையில் ஹிந்துக் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், முஸ்லிம் அமைப்புகள் அல்லது அரசு சாரா நிறுவனங்களை குறி வைக்கவில்லை. ஒரு அமைப்பு FCRA-இன் கீழ் வருகிறதா என்பதும், அதன் FCRA அந்தஸ்து முடிவுக்கு வரும்போது, அதன் வெளிநாட்டு நிதி வரத்தும் சொத்துக்களும் என்ன ஆகும் என்பதுமே இதில் முக்கியம்.
வெளிநாட்டு நிதியைப் பெற்று, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடந்த சம்பவங்களை மறந்து விட்டு மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி, ஒரு கிறிஸ்துவ மிஷனரி போல் செயல்படுகிறது. அகில இந்திய கிறிஸ்தவ சபை (AICC), என்ற அமைப்பு நிறைவேற்றிய தீர்மானம் போலவே காங்கிரஸ் கட்சியின் தீர்மானமும் அமைந்துள்ளது. முன்மொழியப்பட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி வன்மையாக எதிர்த்துள்ளதுடன் ‘அரசியல் சாஸன பண்புகளை நிலைநாட்ட உறுதிபூண்ட அரசியல் கட்சிகள் அதனை நிறைவேற்றுவதை எதிர்க்க / தடுக்க வேண்டும்’ என்று வேறு குரலெழுப்புகிறது. பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் உண்மையான கலந்தாலோசனை நடத்தவும் அழைப்பு விடுத்தது.

‘கிறிஸ்தவ நிறுவனங்கள் தலைமுறையாக மத, ஜாதி வேறுபாடு கடந்து ஏழைகளுக்குச் சேவை செய்து வருவதாகவும், தங்கள் கணக்குகளைச் சட்டப்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தத் தயாராக இருப்பதாகவும்’ காங்கிரஸ் தெரிவித்து சான்றிதழ் கொடுத்தது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்கள் மூலம், 2014 முதல் 2017 வரை 18,000க்கும் அதிகமான அரசு சாரா நிறுவனங்கள் முறையான கணக்குகளை உரிய காலத்தில் தாக்கல் செய்யாத காரணத்தால், தங்களது FCRA உரிமங்களை இழந்தன. 2018 முதல் 2022 வரை 2,000 நிறுவனங்களின் FCRA பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. அரசு சாரா நிறுவனங்களுக்கு வரும் நிதியை கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்குவது சட்ட நடவடிக்கை மூலம் நடைபெறுகிறது. ஆனாலும், பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த, அர்பன் நக்சல்கள், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகள் உள்ளிட்டோருக்கு, பல நாடுகள் அதிக அளவில் நிதி அனுப்புவது தொடர்கதை ஆகியுள்ளது. உஷார்!

மணிப்பூர் கலவரத்தில் அந்நிய சதி!

பாரதத்தில் மதமாற்றத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. பொ.யு 7 ஆம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்புகள் நடந்த காலம் தொடங்கி, கிறிஸ்தவ மதப் பரப்புரையாளர்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு வெளிப்படையான அரசாங்க அதிகாரத்தைப் பெற்றிருந்த பிரிட்டிஷ் காலம் வரை, இது நீடித்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், இந்த மதமாற்றங்களின் தன்மை கணிசமான கலக்கத்திற்கு வழிவகுத்தது. இவற்றில் பெரும்பாலானவை மத்திய பாரதத்தின் வனவாசி (பழங்குடியினர்) பகுதிகளிலும் இன்றைய சத்தீஸ்கர் பகுதியிலும், இன்னும் ஆபத்தான முறையில், அஸ்ஸாமின் நாகா மலை மாவட்டத்திலும், பின்னர் நாகாலாந்து மாநிலத்திலும் மேற்கொள்ளப்பட்டன. மணிப்பூரில் நடந்த கலவரத்தில், கிறிஸ்துவ மிஷனரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நிதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சபை சலுகைகளுக்காக, அரசியல் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவிலும், மேகாலயாவிலும் இதே நிலைதான். மேகாலயாவில் இன்று கிறிஸ்தவ மக்கள் தொகை 80 சதவீதத்திற்கும் மேலே.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் சர்ச்சின் பங்கு!

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு, மே 22 அன்று நூறாவது நாள் போராட்டத்தில், கடலோரப் பகுதி மக்கள் பனிமய மாதா தேவாலயத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அணிவகுத்தனர். கத்தோலிக்க சமூக உறுப்பினர்களும், சில மதத் தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவ மதப்போதகர் மோகன் சி. லாசரஸ் போன்றவர்கள் ஆலையை ‘நச்சு தொழிற்சாலை’ என்று குறிப்பிட்டு, மூடக் கோரி மக்களை ஊக்குவித்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளைப் போராட்ட நாளாக அறிவித்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், சர்ச் செல்வாக்கு இருந்ததாக சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும், சில சர்ச் அதிகாரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் போராட்டங்களை முன்னின்று நடத்தியதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல்களைப் பரப்பியதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெளிநாட்டு நிதி உதவியுடன் போராட்டம் நடந்ததாக அன்றைய தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பின்னர் ஆலை மூடப்பட்டது. இந்த நிகழ்வு தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான மோதலை வெளிப்படுத்தியதுடன், மத அமைப்புகளின் சமூகப் பங்கையும் விவாதத்திற்கு உள்ளாக்கியது.

கட்டுரையாளர் : ஈரோடு சரவணன்