ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, சந்தானம் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
நாராயணன் – பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதயத்தூர் கிராமத்தில் பிறந்தார், நா. சந்தானம் அவர்கள். அவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா மற்றும் இரண்டு அண்ணன்கள். தந்தை விவசாயம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு குடிபெயர்ந்தனர்.
எட்டாம் வகுப்பு வரை தூத்துக்குடியில் உள்ள பி.எஸ் சோமசுந்தர நாடார் உயர்தர ஆரம்பப் பாடசாலையில் படித்தார். ஒன்பதாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி வகுப்பு வரை, கால்டுவெல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். மூத்த அண்ணனுக்கு தமிழக அரசுப்பணி கிடைத்ததால், குடும்பத்துடன் சென்னையில் உள்ள சைதாப்பேட்டைக்கு குடியேறினர்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவித்த எமர்ஜென்சி கொடுந்துயர சம்பவங்களை விளக்குவதற்காக, 1977 ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் தாம்பரத்தைச் சேர்ந்த நாராயணராவ் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அதில் கலந்துகொண்டு நாராயணராவின் பேச்சைக் கேட்டு, சங்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டார்.
தினசரி ஷாகாவிற்கு செல்ல ஆரம்பித்து, காலப்போக்கில் சைதாப்பேட்டையில் ஷாகா ஆரம்பித்தார். எமர்ஜென்சி முடிந்ததும், சங்கத்தின் சார்பில் “ஜன ஜாக்ரன்” (வீடுகள் தோறும் பொதுமக்கள் சந்திப்பு) நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து, சங்கத்தைப் பற்றி சுற்றியுள்ள பகுதி மக்களிடம் எடுத்துரைத்தார். இல நடராஜன் ஜி, சாம்பமூர்த்தி ஜி, ராமசாமி ஜி, வெங்கட ராமசாமி ஜி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்கள் மூலம், பல சங்க விஷயங்கள் அறிந்து கொண்டதாக நம்மிடம் தெரிவித்தார், சந்தானம்.
சைதாப்பேட்டையில் ஷாகா ஆரம்பித்தார். அந்த ஷாகாவிற்கு முக்கிய சிக்ஷக்காக சந்தானம் இருந்தார். செயலாளராக சீனிவாசன் இருந்தார். தி.க.வினரால் பலவித இடையூறுகள் ஏற்பட்டன. ஷாகாவில் பயிற்சி செய்யும் போது, சைக்கிளில் வேஷ்டியை மடித்து வைப்பார்கள். அதை அவர்கள் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். சங்கஸ்தானில் முந்தின நாள் இரவு, கூரான கல் மற்றும் உடைந்த பாட்டில்களைப் போட்டு விடுவார்கள்.
பயிற்சி செய்யும் ஸ்வயம்சேவகர்களுக்கு, அடிபட்டு ரத்தம் வடியும். இதனைக் கண்டு ஆனந்தம் அடைவார்கள். இத்தகைய துயர சம்பவத்தை தடுத்து நிறுத்த எண்ணி, அவ்வாறு செய்பவர்களை கண்டுபிடித்து கண்டித்தார்கள். எனினும் மற்றொரு வடிவில் அவர்கள் பிரச்சினை செய்தார்கள். அவர்களது அச்சுறுத்தலையும் மீறி, தொடர்ந்து ஷாகா நடத்தினர்.
அந்த ஷாகாவிற்கு சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான சிவராம் ஜி, அப்போதைய பிராந்த பிரச்சாரக்கான சூரி ஜி, கோட்ட அமைப்பாளர் சண்முகநாதன் ஜி என பலரும் வருகை புரிந்து, கடுமையான சூழலிலும் தொடர்ந்து ஷாகா நடத்துவதற்கு ஊக்கம் அளித்தனர். அந்த ஷாகாவிற்கு வந்த சீனிவாசன் ஜி, பின்னர் மாநில பொறுப்பிலும், சத்திய நாராயணன் ஜி தென் தமிழகத்தில் பிரச்சாரக்காகவும் இருந்து உள்ளார்.
ஒரு பக்கம் ஜவுளி வியாபாரம், மறுபுறம் சங்க வேலை என இரண்டு பணிகளையும், ஒருசேர திறம்பட நடத்தி வந்தார், சந்தானம். 1982ல், சென்னை பெரம்பூர் அருகில் உள்ள பெரியார் நகருக்கு மாறினார். அங்கு தலைமைச் செயலக ஊழியர்கள் அதிகம் பேர் வசித்தனர். அங்கே நல்லோர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்து, அரசு ஊழியர்கள் மத்தியில் சங்க வேலையை செய்தார்.
அப்போது பெரியார் நகர் வளர்ந்து கொண்டிருந்த பகுதி. சங்க ஸ்வயம்சேவகர்கள் ஒன்றிணைந்து, தினமும் அதிகாலை பஜனை செய்வர். அங்கே கோயில் கட்டுவதற்காக, புதியதாக வீடு கட்டும் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, அவர்களிடம் பேசி ஒவ்வொரு குடும்பத்திடம் தலா 100 செங்கல், ஒரு மூட்டை சிமெண்ட் என பொருட்களை சேகரித்து, அதன் மூலம் சேகரிக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு விநாயகர் கோயிலைக் கட்டினர். அந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு காஞ்சி ஸ்வாமிகள் வந்திருந்தார்.
“பெரம்பூர் இயேசுவுக்கே” என மாற்று மதத்தினரால், வீடுகள் தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மதமாற்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் மீண்டும் வராத வண்ணம் ஹிந்து எழுச்சி உருவாகியது.
1989 ஆம் ஆண்டு, திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் குடியேறி, ரசாயனத் தொழில் செய்தார். ஜாதி பாகுபாடு அதிகம் இருந்ததால், மக்களை ஒற்றுமைப்படுத்த மார்கழி மாதத்தில் பஜனை நிகழ்த்துவார். அதில் அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்துவார்கள். ஜாதி வேறுபாடுகளை அறவே நீக்க, அனைத்து ஹிந்து குடும்பங்களையும் ஒன்றிணைத்து கூட்டு வழிபாடு நிகழ்த்துவார். அயோத்தியில் ராமர் கோயில் நிறுவ, நாடு முழுவதும் செங்கல் திரட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதனை முன்நின்று நடத்தினார். அதனால் சில பிரச்சினைகள் வந்தபோதும், சமாளித்து நடத்தி முடித்தார்.
1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி, கலாராணி அம்மாளை திருமணம் செய்த சந்தானம் அவர்களுக்கு, ஹேமா பார்வதி – ராமலக்ஷ்மி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பல அதிகாரிகளும் சந்தானத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவரது குடும்பமே சங்கக் குடும்பம்.
பல இடையூறுகள் ஏற்பட்டபோதும், தொடர்ந்து ஷாகா நடத்திய சந்தானம் அவர்கள், நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.
அ. ஓம்பிரகாஷ்