அந்தோ பரிதாபம்

கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக மாறிவருகிறது காங்கிரசின் நிலைமை. பஞ்சாபில் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள, புது ரத்தம் பாய்ச்ச களம் இறக்கப்பட்ட சித்து, அமரீந்தர் சிங்கை விரட்டிவிட்டதோடு வந்த வேலையை முடித்துக்கொண்டு தானும் ராஜினாமா செய்துவிட்டார்.

அடுத்ததாக சத்தீஸ்கரிலும் இரண்டரை வருட முதல்வர் பதவி என ஒப்பந்தத்தில் முதல்வரான தற்போதைய முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் அம்மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கும் இடையே மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மற்றொருபுறம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றிக்கொண்டே வருகின்றன.

பல காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க பக்கம் தாவிவிட்ட சூழலில், மீதமுள்ள காங்கிரஸ் கட்சியையும் கரைக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்துவரும் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் அகில இந்திய மகளிரணி தலைவர் சுஷ்மிதா தேவ் காங்கிரசில் இருந்து விலகி திருணமூல் காங்கிரசில் இணைந்து ராஜ்ய சபா எம்.பியாகி விட்டார். கேரளாவில் சசிதரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறிவிட்டார்.

கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ, காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் ஐக்கியமாகிவிட்டார். கோவாவில் மேலும் பல காங்கிரஸ் தலைவர்களின் அணிமாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரசை சேர்ந்த மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரிணாமூல் காங்கிரசில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ஜி 23 என்ற காங்கிரஸ் அதிருப்தித் தலைவர்களின் கூட்டமைப்பில் ஒருவரான மூத்த கங்கிரஸ் தலைவர் கபில் சிபல், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறுகின்றனர்? என கேட்டுள்ளார்.

காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், ‘காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ராகுலும் மற்ற இரண்டு தலைவர்களும் பொறுப்பு. மூன்று பேர் தற்போது கட்சியை நடத்துகிறார்கள். அதில் ஒருவர் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனால் அவர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என விமர்சித்துள்ளார். சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா, காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் அவசியம். தலையில்லாமல் உடல் மட்டும் இருந்து என்ன பயன். படைத் தளபதி யாருமில்லையென்றால், எவ்வாறு கட்சி போராடும் என விமர்சித்துள்ளது.

சுதந்திரம் பெற்றதும் காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவு, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற கனவுகளை எல்லாம், காங்கிரஸ் கட்சியில் உள்ள அதன் இன்றைய தலைவர்கள் நிறைவேற்றி வருகின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.