நீங்களும் அறங்காவலர் ஆகலாம்

ஹிந்து அறநிலையத் துறையின் கீழ்இயங்கும், ஆண்டு வருவாய் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் உள்ள கோயில்களில், பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமிக்க ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில், மாவட்ட அறங்காவலர் நியமன குழுவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை `உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, பாடி, சென்னை 50′ என்ற முகவரிக்கு நவம்பர் 9ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத் தேதியன்று, விண்ணப்பதாரரின் வயது 25க்கு குறைவாக இருக்கக் கூடாது. ஒழுக்கக்கேடு சம்பந்தமான குற்றத்துக்காக குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அத்தகைய தண்டனை மாற்றப்பெறாமல் அல்லது குற்றம் மன்னிக்கப் பெறாமல் உள்ளவர்கள், ஏற்கெனவே ஒரு கோயிலின் அறங்காவலராக இருந்து நிர்வாகக் குழுவால், அதிகாரிகளால் நீக்கப்பட்டவர்கள், அறநிலையத்துறைக்கு பாக்கி வைத்திருப்பவர்கள், ஹிந்து சமயத்தைப் பின்பற்றாதவர்கள், அரசு அலுவலர்கள், அரசு நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனி நிறுவனங்கள், அரசு சார்பான நிறுவனங்களில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் மாவட்ட அறங்காவலர்களாக நியமனம் செய்யத் தகுதியற்றவர்கள். எனவே, தகுதியானவர்கள், பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.