மிலிட்டரி டைரக்ட் என்ற ராணுவ இணைய தளம், உலகின் சிறந்த ராணுவங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. ஒவ்வொரு நிதியாண்டு பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, படை வீரர்களின் எண்ணிக்கை, அவர்களின் ஊதியம், போர் விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்கள், நிலப்பரப்பு, அணு ஆயுதங்கள், உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 100 புள்ளிகள் அளவிலான மதிப்பீட்டில் 82 புள்ளிகளுடன் சீன ராணுவம் முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் அமெரிக்க ராணுவம், 69 புள்ளிகளுடன் ரஷ்யா மூன்றாம் இடமும், பாரத நாட்டு ராணுவம் 61 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது. பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில், அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும், பாரதம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
‘போரில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளில், இந்த எண்ணிக்கை அடிப்படையிலான தரவரிசை சொற்பப் பங்கே வகிக்கும். அனைத்து போர்களிலும் ஆயுதங்கலைவிட ஆயுதங்களின் பின்னால் இருந்து அதை திறமையாக இயக்குபவரே முக்கியம். இதை ‘Man behind the Machine” என கூறுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் பாகிஸ்தான் பயன்படுத்திய, அமெரிக்காவின் அதி நவீன எப் 16 வகை விமானத்தை நமது விமானப்படை வீரர் அபிநந்தன், தன்னுடைய மிக் 21 விமானத்தைக் கொண்டு வீழ்த்தியதை இன்றுவரை நம்பமுடியாமல் உலகமே வியக்கிறது. அந்த வகையில், நமது பாரத ராணுவ வீரர்களின் பயிற்சி, வீரம், விவேகம், கீழ்படிதல், மன தைரியம் போன்றவற்றின் அடிப்படையிலும், நேரடி போர் பயிற்சிகளில் பங்கேற்ற அனுபவங்கள் வாயிலாகவும் அவர்கள் உலகின் மிகச்சிறந்த ராணுவமாக திகழ்கிறார்கள் என்பது திண்ணம்’ என பணி நிறைவு செய்த ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.