உலக முதலுதவி தினம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 14 ‘உலக முதலுதவி தினம்’ என உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது, அவருக்கு எந்த மாதிரியான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்ப்படுகிறது.

முதலுதவி என்பது, உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம்பட்டு என ஆபத்தான நிலையில் இருப்பவருக்கு விரைவாக மற்றும் சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது. ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரை காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும்.

பாரதத்தில் விபத்துக்களால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதலுதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதலுதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது. ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும்முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே முதலுதவி எனப்படும்.

முதலுதவி செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும்வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதவி கற்று அவசர காலத்தில் தேவைபடுபவர்களுக்கு அதனை செய்து உயிர் காக்க இந்நாளில் சபதமேற்போம்.

விபத்துகளின் பொழுது உங்களை நீங்களே சில மணி நேரம் காப்பற்றிக்கொள்ள முடியும். பிறருக்கும் அவசர காலங்களில் உதவவும் முடியும். அதற்குத் தனிப்பட எந்தக் கருவிகளும் தேவையில்லை. தேவையானதெல்லாம் நிதானமும் சமயோசித புத்தியும்தான். ஆபத்தின் பொழுது பீதியடையாமல் இருப்பது மிக முக்கியம். அது கடினம்தான். பயமும் பதட்டமும் நம்மைச் செயல்பட விடாமல் தடுத்துவிடும். ‘ஒரு விபத்தில் சிக்கிக்கொண்ட பின் அதில் தப்பித்தவர்களுக்கும் தப்பிக்காமல் இறந்தவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவெனில் தப்பிப்பவர்கள் தமது பயத்தை வெற்றிகொண்டு, நான் என்ன செய்யவேண்டும் என்று யோசித்து இறுதிவரை போராடுவதுதான்’ என்கிறார் முதலுதவிகள் குறித்து வகுப்புகள் நடத்தும் ஒரு பிரபல நிபுணர்.