‘வலிமையும், திறமையும் மிக்க பாரதம் என மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் இத்தகைய பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நிதி ஆயோக் பாரதத்தின் மாற்றத்திற்கான பெண்கள் விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 75 பெண் சாதனையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா சுப்பிரமணியன், டாக்டர் ரம்யா எஸ்.மூர்த்தி, தேவிபாலா உமாமகேஸ்வரன் ஆகிய மூன்று பெண்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
கர்நாடக இசை மற்றும் இதர பாரம்பரிய பாரதக் கலைகளை இணையம் வழியாக உலக அளவில் கற்பிக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள வித்யா சுப்பிரமணியன், வீட்டிலிருந்து பணி செய்யும் வாய்ப்புகள் மூலம் சுமார் 100 பெண் கலைஞர்கள் மற்றும் ஆசிரியைகள் திறன் பெற உதவி செய்துள்ளார்.
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சிறார்களுக்கு பணியாற்றி வரும் டாக்டர் ரம்யா தனது ‘நிர்மயா இன்னோவேஷன்ஸ்’ என்ற அமைப்பின் வாயிலாக ஆட்டிசம் பாதித்த மற்றும் பல வகை பாதிப்புள்ள நபர்களுக்கு உதவி செய்ய சுப்ரயோகா என்ற ரோபோ அடிப்படையிலான பயிற்சிக் கருவிகளை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு பயிற்சி அளிப்பதோடு விரைவான கற்றலுக்கும் வகை செய்யப்படுகிறது. இதற்கு கீதா எனும் கருவி பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
தேவிபாலா உமாமகேஸ்வரனால் நிறுவப்பட்ட பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் எல்.எல்.பி, 2012 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது பிக்ஃபிக்ஸ் அலைபேசிகள், மடிக்கணினிகள், மேசைக் கணினிகள், டேப்லட்டுகள் ஆகியவற்றுக்கு குறைந்த செலவில் பழுது நீக்குவதில் முதன்மை நிறுவனமாக உள்ளது. தங்களின் இணையதளம் மூலம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் நிறுவனத்தின் நோக்கமாகும்.