கொரோனா 3வது அலை பரவ வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை ஒரு புறம், 3வது அலையால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு என்ற செய்திகள் ஒருபுறம் என மக்களை பயமுறுத்தி வருகிறது. உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமா, முகக்கவசம் இல்லாமல் வெளியில் சுற்றமுடியாதா, வழக்கம்போல அந்த பழைய வாழ்க்கையை வாழ மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட உடன் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. 2022 இறுதியில் நாம் அதனை அடைவோம். 3வது அலை பரவினால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம். ஆனால் அவர்களுக்கு அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. இருந்தாலும், குழந்தைகளுக்கான ஐசியூக்களை மருத்துவமனைகள் தயார் செய்வது நல்லது. சிறுசிறு ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டுவிட்டு நிரந்தரமாக இருக்கும் சூழலை எண்டமிக் என்பார்கள். பாரதத்தில் கொரோனா பாதிப்பு அந்த எண்டமிக் நிலையை எட்டி வருகிறது. பாரதத்தில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி தொடா்பான கூடுதல் தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது. அதன் காரணமாகவே அத்தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளது’ என தெரிவித்தார்.