மயிலாப்பூரில் அ.தி.மு.க வேட்பாளர் நடராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘ஸ்டாலினும் தி.மு.கவினரும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அ.தி.மு.கவை பற்றி அவதூறாக பேசிவருகின்றனர். நாங்கள் அரசின் சாதனைகள், நன்மைகளை எடுத்துச் சொல்கிறோம். தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, கூலிப்படை என இருந்தது. அதனை முடிவுக்கட்டியவர் ஜெயலலிதா. தற்போது, சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளதாக விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற விருதுகளை அவர்கள் பெற்றதில்லை. பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த சென்னை மாநகரத்தில் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மக்களையும் கவனிக்கவில்லை, அவர்களின் குறைகளையும் தீர்க்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய்தான் பேசி வருகிறார்’ என பேசினார்.