சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ‛பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022′ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புத்தகத்தை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் பாக்யராஜ் பேசுகையில், ‘தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது சரியான முடிவு. தகுதியுள்ளவரை தான் பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது. எங்கு வெளிநாடு சென்றாலும் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார். எத்தனை பேர் இந்த வயதில் துடிப்புடன் இருப்பார்கள்? என்பது சந்தேகம்தான். பாரதத்திற்கு இப்படியொரு துடிப்பான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் 3 மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டார்கள், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். குறை பிரசவத்தில் பிறந்தவர்களுக்கு தான் வாய், காது இருக்காது. எனவே, அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘ஆளுநரின் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலினின் கருத்தையும் ஏற்க முடியாது. திரைத்துறையினரை தி.மு.கவினர் நசுக்குகின்றனர். நடிகர் பாக்யராஜ் பா.ஜ.கவுக்கு ஆதரவு என்பதைவிட, பிரதருக்கு ஆதரவு என்றுதான் பார்க்க வேண்டும். இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அம்பேத்கரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள், இதனை எதிர்த்து கிளம்பி வந்துவிட்டனர்’ என்று கூறினார்.