ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பா?

தர்ம சன்ஸ்த்தான் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காளிசரண் மகாராஜ், “பாரதம் சுதந்திரமடைந்தபோது, நம் கண் முன்னே அது இரண்டாக துண்டாடப்பட்டது. இந்தப் பகுதிகளை பாரதத்தில் இருந்து பிரிக்க அரசியலைப் பயன்படுத்தினர். காந்தி பாரதத்தை அழித்தார். அவரை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்குத் தலைவணங்குகிறேன்’ என கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஒவைசி உள்ளிட்டோர் அளித்த புகரின் பேரில் அவரை சத்தீஸ்கர் காவல்துறை கைது செய்தது.

இவ்விவகாரம் குறித்து ஜூனா அகாரா தலைவர் மஹாமண்டலேஷ்வர் சுவாமி யதீந்திரானந்த் கிரி கருத்து கூறுகையில், ‘காளிசரண் மகாராஜின் கருத்துகளை துறவிகள் சமூகம் ஆதரிக்கவில்லை, காந்தியை மதிக்கிறோம். ஆனால், காந்தியை விமர்சித்ததற்காக காளிசரண் மகாராஜ் போன்றவர்கள் கைது செய்யப்படும்போது, பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பகவான் ராமர், சீதையை குறித்து அவதூறாக பேசியவர்கள் மீதும், தொலைக்காட்சி, திரைப்படங்களில் ஹிந்து தெய்வங்களை கேலி செய்தபோதும், கலைஞர்கள் ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்த போதும், அகிலேஷ் யாதவ், முனாவர் பரூக்கி போன்றோர் ஹிந்து மதம், ஹிந்து தெய்வங்கள், துறவிகளை அவமதித்து பேசியபோதும் அரசும் நீதிமன்றமும் என்ன நடவடிக்கை எடுத்தது? ஹிந்து தெய்வங்களை சிறுமைப்படுத்தும் முஸ்லிம்களிடம் அரசும் நீதிமன்றமும் இரக்கம் காட்டுவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தின் மையமாக அகிம்சை இருந்தது. இது பாராட்டப்பட வேண்டும். காந்தி ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பும் முன்பும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய பிற புரட்சியாளர்கள் இருந்தனர். சுபாஷ் சந்திரபோஸ், வீர சாவர்க்கர், பாலகங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் போன்ற தலைவர்களின் மகத்தான பங்களிப்பும் இருந்தது. அவர்களை நாம் மறந்துவிடக் கூடாது. பாரத சுதந்திரத்தின் புகழ் ஒரு தனி நபருக்கு மட்டுமே உரித்தானது அல்ல’ என கூறினார்.