திரைப்படத்துறையை ஒழுங்குபடுத்தும் சட்டமானது 1952ம் ஆண்டு இயற்றப்பட்டு தொடர்ந்து நடைமுறையில் இருந்துகொண்டு வருகிறது. கர்நாடக உயர்நீதிமன்றம், 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் இயற்றப்பட்ட மசோதா இது. இதில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.
திரைப்படத் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக ஆராய நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் 2013ம் ஆண்டு ஒரு குழுவும் ஸ்ரீஷியாம் பெனகல் தலைமையில் 2016ம் ஆண்டு மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டன. இந்த இரண்டு குழுக்களின் அறிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய அரசு, திரைப்படத் தொழிலில் ஏற்படும் இணையதள திருட்டைத் தடுக்க முடிவு செய்தது. அதற்காக, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2019 பிப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, கடந்த மார்ச் மாதம் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தற்போது மீண்டும் 2021ல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டது. ஒளிபரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதா ஜூன் 18-ம் தேதி வெளியிடப்பட்டது.
1.ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கும்போது வயது வாரியாக சான்றிதழ் வழங்கும்படி சட்டம் மாற்றப்பட உள்ளது. அதாவது “U/A – 7+, U/A – 13+, U/A – 16+” என வயது வாரி பார்க்கும் வகையில் உள்ளது.
2.தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ் 10 வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பின்னர் அதைப் புதுப்பிக்க வேண்டும். புதிய வரைவில் இது மாற்றப்பட்டு தணிக்கை சான்றிதழ் இனி காலக்கெடு ஏதுமின்றி ஆயுள் முழுவதுக்குமான சான்றிதழாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3.இந்தப் புதிய சட்டத்திருத்த வரைவில் பிரிவு 5பி (1)-ஐ மீறும் எந்தவொரு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழையும் புதிய பிரிவு 6 (1)-ன் படி மத்திய அரசு திரும்பப் பெறமுடியும். அதாவது தணிக்கை வாரியம் ஒப்புதல் அளித்திருந்தாலும் மத்திய அரசு நினைத்தால் ஒரு படம் வெளியாவதைத் தடுக்கமுடியும். சென்சார் போர்டின் முடிவை மறுபரிசீலனை செய்யவும் உத்தரவிடமுடியும்.
4.ஒளிப்பதிவுச் சட்டம் 1952-ன் பிரிவு 5பி(1)-ல் “ஒரு படம் நாட்டின் பாதுகாப்புக்கோ இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடனான நட்புறவுக்கோசட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்கம் அல்லது அறநெறிக்கோ ஊறு விளைவிப்பதாக இருந்தால், அதற்குச் சான்றிதழும் பொதுவெளியில் திரையிடப்படுவதற்கான அனுமதியும் மறுக்கப்படும். இது அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது இது போன்ற எந்தவொரு குற்றத்திற்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 6 ஏஏவின்படி “ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதியில்லாமல் அதை நகல் எடுக்கவோ அதை வீடியோவாகவோ ஆடியோவாகவோ பதிவு செய்யவோ ஒளிபரப்பு செய்யவோ கூடாது. மீறினால் 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.3,00,000 அல்லது படத்தின் தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் வரை அபராதமும் வசூலிக்கப்படும்.இந்த வரைவும் மசோதா, பொதுமக்கள் கருத்திற்காக வெளியிடப்பட்டு, மசோதாவை அவர்களின் கருத்துகளையும் மத்திய அரசு கேட்டறிந்துள்ளது.