கம்யூனிசவாதிகள் மக்களின் மூளையை மழுங்கடித்து நமது பாரத கலாச்சாரத்திற்கு ஒவ்வாத வெளிநாட்டில் அனுசரிக்கப்படும் பல தினங்களை நமது தலையில் கட்டிவிட்டனர். அதற்கு துணை போனவர்கள் காங்கிரசும் திராவிட கழகங்களும். அப்படி அவர்கள் நம் தலையில் கட்டிய தினங்களில் முக்கியமானது மே- தினம் என அவர்கள் கொண்டாடும் தொழிலாளர் தினம்.
நமக்கு அது ஒரு விடுமுறை நாள்தானே தவிர அது நமது பாரத கலாச்சரத்திற்கு ஏற்ற உண்மையான உழப்பாளர் தினம் அல்ல. அப்படியென்றால் நமது பாரத கலாச்சாரத்திற்கு ஏற்ற தொழிலாளர் தினம் எது, ஏன்?
நமது பாரத பண்பாட்டிற்கேற்ற தொழிலாளர் என்றால் அது விஸ்வகர்மா ஜெயந்திதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.
நீண்ட நெடும் தவத்திற்குப் பின்னால் விஸ்வகர்மாவிற்கு விருத்திரன் என்ற ஒரு மகன் பிறந்தான். ஆரோக்கியம் திடகாத்திரம் நிறைந்த உடல் அமைப்பைப் பெற்றிருந்த அவன் மிகக் கொடியவனாக மாறியதுடன் தேவர்களின் எதிரியான ஹிரண்ய கசிபுவின் முக்கிய தளபதியாக மாறி விருத்திராசுரன் என்ற பெயருடன் மக்களுக்கு கொடுமைகளை செய்தான். அவனை அழிக்க தேவர்கள் மேற்கண்ட அனைத்து முயற்சிகளும் வீணானது.
கடின தவம் புரியும் ததீசி மகரிஷியின் முதுகெலும்பினால் உருவாக்கப்படும் வஜ்ராயுதத்தால் மட்டுமே விருத்திரனை அழிக்க முடியும். அதனை விஸ்வகர்மாவால் மட்டுமே நிர்மாணிக்க முடியும் என தேவகுரு பிரகஸ்பதி அதற்கு பரிகாரம் கண்டறிந்தார்.
ததீசி மகரிஷியை அணுகி வேண்டுகோள் விடுத்தபோது அவர் தன்னுடைய முதுகெலும்பை வழங்க தயாரானார். பிறகு தயக்கத்துடன் விஸ்வகர்மாவை அணுகினர். காரணம் அவரின் மகனை கொல்வதற்காக ஆயுதம் செய்துத்தர அவரையே கோரப்போகிறோம் என்பதுதான்.
ஆனால் விஸ்வகர்மா வஜ்ராயுதத்தை உருவாக்கி தேவர்களிடம் தந்தார். அந்த ஆயுதத்தை பயன்படுத்தி விருத்திராசுரனை அழித்தனர். உலகிற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை பயப்பதற்காக, தவமிருந்து பெற்ற மகனானாலும் அவன் கொடியவனானால் அவனை கொல்வதற்கு தான் கற்றறிருந்த வித்தையை உபயோகித்து அதை நிறைவேற்றியவர் விஸ்வகர்மா.
விஸ்வகர்மா ஜெயந்தியை தொழிலாளர் தினமாக ஜாம்ஷெட்பூர் டாடா நிறுவனம்,மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், ஹிமாசல பிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பாரதம் முழுவதும் மே தினத்தை விடுத்து விஸ்வகர்மா ஜெயந்தியை தொழிலாளர் தினமாக அங்கீகரித்து நமது தொழிலாளர் சமூகத்திற்கு தேவையான தியாகம், தவம், நேர்மை உள்ளிட்ட பாரதத்தின் மிக உயர்ந்த பாரம்பரியத்தை பரப்புவது நமது அரசின் கடமை.
- மதிமுகன்