பாரதிய இதிஹாச சங்கலன சமிதி அமைப்பின் அசாம் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு “பாரதத்தின் கௌரவ இதிகாசம்” என்ற தலைப்பில் ஒரு விரிவுரைத் தொடரை நடத்தியது. இதில், எழுத்தாளர், கட்டுரையாளர், வரலாற்றாசிரியர், ஐக்கிய நாடுகளுக்கான சுவிட்சர்லாந்தின் ஆலோசகர் என பன்முகத் திறமை வாய்ந்த சுமேதா வர்மா ஓஜா கலந்துகொண்டு, ‘கோயில்களைக் கட்டிய ஹிந்து அரசிகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர், ‘மார்க்சிஸ்டுகள், பெண்ணியவாதிகளால் ஆன ஒரு சிறிய குழு நமது வரலாற்றுப் பக்கங்களை சிதைப்பதற்கு காரணமாக இருந்தது. அவர்கள் நமது பாரம்பரியத்திற்கு எதிரான கோட்பாடுகளை வரலாற்றில் புகுத்தினர். மார்க்சிய புரிதல்கள் அனைத்தும் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவை, அவை பெண்களுக்கானவை அல்ல, கிறிஸ்தவ இறையியலில் இருந்து கடன் வாங்கப்பட்ட ‘ஆணாதிக்கம்’ என்ற வார்த்தைக்குள் வடிவமைக்கப்பட்டவை அவை.
பாரத நாகரிகத்தை நாம் வர்ணாசிரம தர்மத்தின் வழியில்தான் பார்க்க வேண்டும். வர்ணம், ஆசிரமம் பற்றிய புதிய உண்மையான புரிதல் நமக்குத் தேவை. நமது தர்ம சாஸ்திரங்களை எழுதிய ரிஷிகள், நான்கு ஆசிரமங்களையும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே வைத்திருந்தனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. நமது பாரத கலாச்சாரம், நாகரிகத்தை புரிந்து கொள்ள நமது ராமாயணம், மகாபாரதம், புராணங்களை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். சுலபா, கார்கி, காத்யாயனி, யக்ஞவல்கியர், அவரது இரண்டு மனைவிகளுக்கு இடையிலான உரையாடல்கள், பிரம்மாச்சரிய, சன்யாச ஆசிரமங்கள் உட்பட அனைத்தும் பெண்களுக்கும் சமமாகவே வைக்கப்பட்டிருந்தன என தெளிவுபடுத்துகிறது.
அக்காலத்தில் 64 கலைகளும் ஆண் பெண் இருவருக்கும் சமமாகவே பயிற்றுவிக்கப்பட்டது. இதனால், ராணிகள் கோயில்கள், ஓவியம், சிற்பங்களை வடிவமைத்தனர். ராணிகள் கோயில்களுக்கு நன்கொடையும் அளித்தனர். விருபாக்ஷா கோயில் சாளுக்கிய வம்சத்தின் லோகமஹாதேவியால் கட்டப்பட்டது. ராணி சாந்தி சிரி, நாகார்ஜுன கொண்டாவில் ஒரு புத்தர் கோயிலைக் கட்டினார். ஒடிசாவின் மாதவேஸ்வர் தேவ் கோயில் ராணி மாதவதேவியால் கட்டப்பட்டது. காகதிய வம்சத்தின் ருத்ரம்மா தேவியும் பல கோயில்களை நிர்மாணித்துள்ளார். சோழ அரசி சிம்வியா மகாதேவி பழைய கோயில்களைப் புதுப்பித்ததுடன் புதிய கோயில்களையும் கட்டினார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் நரசிம்மவர்மனின் ராணியால் கட்டப்பட்டது’ என தெரிவித்தார்.