வேலை நிறுத்தம் வெற்றியா?

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நேற்று துவங்கியது. தமிழகத்தில் பேருந்துகள் அதிகம் ஓடவில்லை. சுமார் 30 சதவீத பேருந்துகளே இயங்கின. தமிழகத்தை பொறுத்தவரை இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வேலை நிறுத்தத்தை தி.மு.க ஆதரிக்கிறது. ஆனால், அதே, தி.மு.க ஆளும் அரசோ அதை எதிர்க்கிறது, பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என உத்தரவு போடுகிறது.

இப்போது மட்டுமல்ல, தி.மு.க ஆட்சி நடக்கும்போதெல்லாம் இது போன்ற கேலி கூத்துகள் அரங்கேறுவது சகஜமே. கடந்த பத்து வருடங்களாக இந்தத் தொல்லை இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. கடந்த காலங்களில் இந்த வேலை நிறுத்தத்திற்கான தேதிகளை தி.மு.க அறிவிப்பது எல்லாம் வெள்ளி அல்லது திங்கள் கிழமையாகவே இருக்கும். காரணம், அரசு அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை. இப்போதும் அது தொடர்கிறது.

நேற்றும் இன்றும் நடக்கும் வேலை நிறுத்தம் மத்திய அரசுக்கு எதிரானது என்பதால், எதிர் கட்சியான தி.மு.க பங்கேற்றே தீர வேண்டும் என்பது அதன் கட்டாயம். ஆளும் கட்சியாக இருப்பதால், ஒப்புக்கு அதனை தடுத்தாக வேண்டும். இதனை மக்கள் எதிர்த்து கேள்வியும் கேட்க முடியாது, காரணம் தி.மு.க ரௌடிகளின் மீதான பயம். விளைவு வேலை நிறுத்தம் வெற்றி என அறிவிக்கப்படும். காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள், மேற்கு வங்கம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த வேலை நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற மாநிலங்களில் அனைத்தும் வழக்கம்போலவே செயல்படும் என்பதால், இந்த வேலை நிறுத்தத்தால் மத்திய அரசுக்கு நீண்ட கால அளவில் பெரிய பாதிப்பிருக்காது.

ஆனால், அடுத்த பிரதமர் கனவில் இருக்கும் ஸ்டாலின், தமிழகத்தை முன்னேற்றுவேன், துபாய் சென்று தமிழகத்தில் தொழில் துவங்க அந்நிய முதலீட்டை கை நிறைய பெற்று திரும்பினேன், தமிழகத்தை ஒரு பில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்துவேன் என கூறி வருகிறார். அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற அரசியல் சார்புடைய போராட்டங்கள், எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பது போன்ற செயல்பாடுகளால் நமது நாட்டின் மீதான வெளிநாட்டு நிறுவனங்களின் மதிப்பீடு குறைந்துவிடாதா, அப்படி குறைந்தால் யார் இங்கு நம்பி முதலீடு செய்வார்கள்? பிறகு எப்படி வாக்குறுதியை நிறைவேற்றுவது என ஏன் சிந்திக்கவில்லை? இந்த கோணத்தில் சிந்தித்தால் தி.மு.க ஆதரிக்கும் இதுபோன்ற வேலை நிறுத்தங்கள் அவர்களுக்கு நீண்ட கால அளவில் தோல்வியாகவே இருக்கும் என்பது திண்ணம்.

மதிமுகன்